Published : 18 Aug 2020 08:14 AM
Last Updated : 18 Aug 2020 08:14 AM
மது அருந்துவோரின் குடும்பத்தினர் படும்பாட்டை உணர்ந்து, சென்னையை மதுவிலக்கு மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும் என்றகோரிக்கை எழுந்துவந்த நிலையில், சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்றுமுதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதனால், மது அருந்துவோரின் குடும்பத்தினர் வருத்தமும், வேதனையும் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தின் மற்ற அனைத்து பகுதிகளிலும் கடந்த மே 7-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும்கடந்த 4 மாதங்களுக்கு மேலாகடாஸ்மாக் மதுபானக் கடைகள்மூடப்பட்டிருந்தன. தொடர்ந்து,மற்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்டும், இங்கு மதுக்கடைகள் மட்டும் திறக்கப்படவில்லை.
‘சென்னையில் கடந்த 147 நாட்களாக மது விற்பனை இல்லாததால், மதுவுக்கு அடிமையானோர் மன மாற்றம் அடைந்துள்ளனர். எனவே, மாநிலத் தலைநகரான சென்னையை மதுவிலக்கு மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கும்’ என்ற எதிர்பார்ப்பு மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் இருந்தது.
மாற்றம் ஏற்பட்டுள்ளது
வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, ‘‘மது இல்லாமல் வாழவே முடியாது என, எந்த வேலைக்கும் போகாமல் எப்போதும் போதையிலேயே இருக்கும் என் கணவர் இதுநாள் வரை வீட்டுக்கு சுமையாகத்தான் இருந்தார். கடந்த 4 மாதங்களாக மதுக்கடைகள் இல்லாததால், அவரிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மது இல்லாமலும் வாழ முடியும் என்பதை உணர்ந்து, தற்போது வீட்டுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்கி வருவது என பொறுப்புள்ள குடும்பத் தலைவராக மாறிஉள்ளார். மதுவிலக்கை அமல்படுத்த இதுவே சரியான நேரம். சென்னையில் இருந்து இந்தப் பணியை அரசு ஆரம்பிக்கலாம்’’ என்றார்.
கொடுங்கையூர் எழில் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, ‘‘எப்போதும் போதையிலேயே இருக்கும் என்மகன், மதுவில் இருந்து மீள்வான்என்ற நம்பிக்கையே இல்லை. மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மதுப் பழக்கத்தில் இருந்து மீண்டுள்ளான். அவனுக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிட்டுள்ளோம். சென்னையில் இனி மதுக்கடையை அரசு திறக்கக் கூடாது’’ என்றார்.
தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மது குடிக்கும் பழக்கம் உள்ள ஒருவர் கூறும்போது, ‘‘இதுநாள் வரை காலை எழுந்தவுடன் கை, கால்கள் உதறும். எப்போது பிற்பகல் 12 மணி ஆகும்.. மதுக்கடை திறப்பார்கள் என்று காத்திருப்பேன். இப்போது அந்த எண்ணமே இல்லை. அதனால், குடும்பத்தை பற்றி சிந்திக்க நேரம் கிடைக்கிறது. மது அருந்துவோரின் செயல்பாடுகளால் மதுக்கூடங்கள் மட்டுமின்றி சுற்றுப்புறமும் வழக்கமாக துர்நாற்றமாக இருக்கும். சென்னையில் அந்த துர்நாற்றம் கடந்த 4 மாதமாக இல்லை. இந்த நிலை நீடிக்க வேண்டும் என்றால், மதுக்கடைகளை திறக்கக் கூடாது’’ என்றார்.
மையங்களுக்கு வேலையில்லை
மதுப் பழக்கம் உள்ள இன்னொருவர் கூறும்போது, ‘‘முதல்வர் உத்தரவின்படி, சிறுநீரகம் செயலிழந்தோருக்கு சிகிச்சை அளிக்கமண்டலம்தோறும் டயாலிசிஸ் மையங்களை மாநகராட்சி திறந்து வருகிறது. மதுக்கடைகளை மூடிவிட்டால், இந்த மையங்களுக்கு வேலையே இல்லை’’ என்றார்.
தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லப்பாண்டியன் கூறும்போது, ‘‘மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களிடம் தற்போது நல்ல மாற்றம் தெரிகிறது. மொத்தத்தில் 20 சதவீதம் பேர் மட்டுமே வெளி மாவட்டங்களுக்கு சென்றும், விதிகளை மீறிய உள்ளூர் விற்பனை மூலமாகவும் மது அருந்துகின்றனர். மற்ற 80 சதவீதம் பேர் மதுப் பழக்கத்தில் இருந்து மீண்டுள்ளனர். இதனால், அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆரோக்கியமான சூழலை பயன்படுத்தி, சென்னையை மதுவிலக்கு மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். இதனால் மக்கள் மத்தியில் அரசுக்கு நற்பெயர் கிடைக்கும்’’ என்றார்.
மது அருந்துவோர் குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு, சென்னையை மதுவிலக்கு மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்த நிலையில், சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் இன்றுமுதல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது, மது குடிப்போரின் குடும்பத்தினரிடம் பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ‘‘கடந்த4 மாதங்களாக நிம்மதியாக இருந்தோம். பழைய சிரமங்களும், வலிகளும் மீண்டும் திரும்பப் போகிறதுஎன்பதை நினைத்தால் கவலையாக இருக்கிறது’’ என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT