Last Updated : 17 Aug, 2020 09:49 PM

2  

Published : 17 Aug 2020 09:49 PM
Last Updated : 17 Aug 2020 09:49 PM

காரைக்குடி நகராட்சிப் பள்ளியில் இடம் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பெற்றோர்: 200 இடங்களுக்கு 700 பேர் போட்டி 

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்காக குழந்தைகளுடன் குவிந்த பெற்றோர்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பில் 200 இடங்களுக்கு 700 பேர் போட்டியிட்டதால், பலரும் தங்களது குழந்தைகளுக்கு இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அதைத் தடுக்க முடியாமல் அரசுப் பள்ளி நிர்வாகங்கள் திணறுகின்றன.

ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

நடுநிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி, 2013-2014-ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது 6 ஆசிரியர்களும் 218 மாணவர்களும் இருந்தனர்.

அதே ஆண்டு புதிதாக தலைமைஆசிரியராக பொறுப்பேற்ற ஆ. பீட்டர்ராஜா முயற்சியால் தனியார் பள்ளிகளைப் போன்று சீருடை, டை, ஷூ அணியும் முறை இங்கு கொண்டு வரப்பட்டது. இது பெற்றோரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

2014- 2015-ம் கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. தரம் உயர்த்தப்பட்டதில் இருந்தே 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்று வருகிறது. இதனால் மாணவர் எண்ணிக்கையும் படிப் படியாக உயர்ந்தது.

கடந்த ஆண்டே 1,325 மாணவர்கள் படித்தனர். கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது. 200 இடங்களே உள்ள 6-ம் வகுப்பிற்கு 700 பேர் இடம் கேட்டு குவிந்தனர். இதனால் சில மணி நேரத்திலேயே மாணவர்கள் சேர்க்கை முடிந்ததால், பலரும் தங்களது குழந்தைகளுக்கு இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ. பீட்டர்ராஜா கூறுகையில், ‘‘ ஆசிரியர்கள், கட்டிட வசதி அடிப்படையில் 6-ம் வகுப்பில் 200 மாணவர்களே சேர்க்க முடியும். அதனால் பலருக்கும் இடம் கொடுக்க முடியவில்லை,’’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x