Published : 17 Aug 2020 08:43 PM
Last Updated : 17 Aug 2020 08:43 PM
சிவில் தேர்வு உள்ளிட்ட ஆட்சிப்பணிக்கான இந்த ஆண்டு முதன்மைத்தேர்வு, 2021-ம் ஆண்டுக்கான முதல்நிலை, முதன்மை தேர்வுகளுக்கான அட்டவணைகளை யூபிஎஸ்சி வெளியிட்டது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப்பணிகளுக்கான குடிமைப்பணி (சிவில் சர்வீசஸ்) தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தத் தேர்வுகளை இந்தியா முழுதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் எழுதுவார்கள்.
இதில் முதல் நிலைத்தேர்வு (prelims), முதன்மை தேர்வு (mains), மற்றும் நேர்முக தேர்வு என்ற அடிப்படையில் ஆட்சிப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஐபிஎஸ் படிப்பவர்கள் காவல்துறைக்கும், ஐஏஎஸ் படிப்பவர்கள் நிர்வாகப்பணிக்கும், ஐஎப்எஸ் படிப்பவர்கள் வெளியுறவுத்துறைக்கும், ஐஆர்எஸ் படிப்பவர்கள் வருமான வரித்துறைக்கும் தேர்வு செய்யப்படுவர்.
இதுத்தவிர 23-க்கும் மேற்பட்ட ஆட்சிப்பணி படிப்புகளுக்கும் இது ஒன்றே தேர்வு. ஏதாவது ஒரு பட்டப்படிப்பும், பயிற்சியும் இருக்கும் யாரும் தகுந்த வயது இருக்கும் பட்சத்தில் தேர்வு எழுதலாம். 10 லட்சம் பேர் எழுதும் இந்த தேர்வுகளில் வருடத்திற்கு சுமார் ஆயிரம்பேர் தேர்வாகிறார்கள்.
இந்த ஆண்டுக்கான முதல் நிலைத்தேர்வுகள் கடந்த மே.31 நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா தொற்று காரணமாக மார்ச் 24 முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 2020-க்கான சிவில் சர்வீஸ் முதல் நிலைத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக அக்டோபர் 4 அன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான (2021) சிவில் தேர்வுகள் குறித்த அறிவிப்பையும், 2020-ம் ஆண்டுக்கான முதன்மைத்தேர்வு தேதியையும் யூபிஎஸ்சி அறிவித்துள்ளது.
* 2020-ம் ஆண்டுக்கான சிவில் தேர்வுக்கான முதன்மைத்தேர்வுகள் முதன்மை தேர்வு வருகிற 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி ஆரம்பித்து 9,10,16,17 என தொடர்ந்து 5 நாட்கள் முதன்மை தேர்வு நடத்தப்பட உள்ளது.
* இதேப்போன்று 2021-ம் ஆண்டுக்கான சிவில் தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27/2021 அன்று நடக்கிறது. சிவில் தேர்வுக்கான முதல் நிலைத்தேர்வு அறிவிப்பு பிப்ரவரி 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 2/2021 கடைசித்தேதி.
* 2021-க்கான சிவில் தேர்வில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான முதன்மைத் தேர்வு செப்.17/2021 வெள்ளிக்கிழமை தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.
இது தவிர யூபிஎஸ்சியின் மற்றத் தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT