Published : 17 Aug 2020 06:43 PM
Last Updated : 17 Aug 2020 06:43 PM
அரசிடம் நிதி பெறாமலேயே சிவகங்கை பழைய மருத்துவமனையை உடனடியாக கரோனா வார்டாக மாற்றி சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டினார்.
சிவகங்கை, காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் கரோனா வார்டுகளை நேற்றுமுன்தினம் இரவு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், எம்எல்ஏ நாகராஜன், மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் சிவகங்கை பழைய மருத்துவமனை பல ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்தது. அரசிடம் நிதி பெறாமலேயே, அந்த மருத்துவமனையை உடனடியாக கரோனா வார்டாக மாவட்ட ஆட்சியர் மாற்றினார்.
பல மாவட்டங்களில் பழைய மருத்துவமனை கட்டிடங்கள் பயன்பாடின்றி உள்ளநிலையில் அரசிடம் நிதி பெறாமல், பழைய மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த மாவட்ட ஆட்சியரை சுகாதார அமைச்சர் பாராட்டினார்.
தொடர்ந்து சுகாதார அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிளாஸ்மா சிகிச்சை 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. அதை 6 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று தொடங்கியதில் இருந்து இதுவரை 15 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் தயாராக உள்ளோம்.
நோய் தொற்று காலத்தில் தனியார் மருத்துவமனைகள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உயிர்காக்கும் மருந்துகள் போதுமான அளவு உள்ளதால் தமிழகத்தில் 2.78 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் இருப்பதால் ரயில் பெட்டிகளில் அமைக்கப்பட்ட படுக்கைகள் தேவைப்படவில்லை. மாநிலம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட சித்தா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்று கூறினார்.
சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு இரவு 9 மணிக்கு மேல், அமைச்சர் ஆய்வுக்கு வந்ததால் மருத்துவர்கள், பணியாளர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT