Published : 17 Aug 2020 05:10 PM
Last Updated : 17 Aug 2020 05:10 PM

தேடப்பட்டது தெரியாமல் 9-வது முறையாக ரூ.10 ஆயிரம் கரோனா நிவாரண நிதி வழங்க வந்த யாசகர்: அறிவித்த சுதந்திரதின விருதை வழங்கி கவுரவித்த ஆட்சியர்

மதுரை

சுதந்திர தினவிழாவில் விருது வழங்க தேடப்பட்டது தெரியாமல் இன்று 9-வது முறையாக ரூ.9 ஆயிரம் கரோனா நிவாரணம் வழங்க வந்த யாசகர் பூல்பாண்டியக்கு மதுரை ஆட்சியர், அவருக்கு அறிவித்த விருதை வழங்கி கவுரவித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவுவதற்கும், இந்தத் தொற்றை தடுப்பதற்கும் கார்பரேட் நிறுவனங்கள், பெரும் வியாபாரிகள் அரசுக்கு கரோனா நிவாரணநிதி வழங்கி வருகின்றனர்.

ஆனால், பொது இடங்களில் யாசகம் பெறும் தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டி, தொடர்ந்து எட்டு முறை தலா ரூ.10 ஆயிரம் வீதம் 80 ஆயிரத்தை கரோனா நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி தன்னுடைய பொதுநலத்தை இந்த சமூகத்திற்கு உணர்த்தினார்.

இவர், ஒரே இடத்தில் தொடர்ந்து தங்குவதும் இல்லை. யாசகம் பெறுவதும் இல்லை. ஒவ்வொரு நாளும் வெவ்வெறு பகுதிகளுக்குச் சென்று யாசகம் பெறுகிறார்.

அதனாலேயே, சுதந்திர தினவிழாவில் இவரை கவுரவிக்கும் வகையில் மதுரை ஆட்சியர் விருது அறிவித்தும் பூல்பாண்டி தங்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் அந்த விருதை கடைசி வரை அவருக்கு வழங்க முடியவில்லை. தொடர்ந்து அதிகாரிகள், பூல்பாண்டியைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் தன்னை மதுரை மாவட்ட நிர்வாகம் சுதந்திர தினவிழா விருது வழங்கத் தேடுவதை அறியாமல் வழக்கம்போல் யாசகம் பெற்ற பணம் ரூ.10 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு கரோனா நிவாரண நிதியை வழங்க ஆட்சியரை சந்திக்க இன்று வந்தார். அவரைப் பார்த்து நிம்மதியடைந்த அதிகாரிகள் அவரிடம், அவருக்கு விருது வழங்கிய விவரத்தைத் தெரிவித்து ஆட்சியர் டி.ஜி.வினயிடம் அழைத்துச் சென்றனர்.

பூல்பாண்டியோ, தான் கொண்டு வந்த ரூ.10 ஆயிரத்தை கரோனா நிவாரண நிதியாக வழங்கி ஆட்சியரை நெகிழச் செய்தார். ஆட்சியர் அவரின் சேவையைப் பாராட்டி, அவருக்கு அறிவித்த சுதந்திரதினவிழா விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிக் கவுரவித்தார். ஆனால், அவரோ எந்த சலனமும் இல்லாமல் வழக்கம்போல் ஆட்சியிரிடம் விடைப்பெற்றுச் சென்றார்.

வழக்கமாக பூல்பாண்டி, ஆண்டுதோறும் காமராஜர் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளில் மட்டுமே தான் சேமித் வைத்த யாசகம் பெற்ற பணத்தை கொண்டு அரசுப் பள்ளிகளுக்கு உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஆனால், கரோனா ஊரடங்கில் கஷ்டப்படும் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவி உடனடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காக மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து அவர் இதுவரை ரூ.90 ஆயிரம் கரோனா நிவாரணம் நிதி வழங்கியுள்ளார்.

பூல்பாண்டியிடம், விருது பெற்ற மகிழ்ச்சியை பற்றி கேட்டபோது, ‘‘விருதுக்காகவோ பாராட்டுக்காகவோ நான் கரோனா நிவாரணம் நிதி வழங்கவில்லை. மதுரை மக்கள், மல்லிகை போல் மனம் கொண்ட மக்கள். யாரையும் பசியால் வாட விடமாட்டார்கள். நான் பல ஊரில் யாசகம் பெற சென்றுள்ளேன்.

ஆனால், மதுரையில் மட்டுமே ஒரு நாள் கூட பசியால் வயிறு காயவில்லை. யாராவது சாப்பாடு வாங்கி கொடுத்துவிடுவார்கள். கைநிறைய யாசகமும் போடுவார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு இந்த தொற்று நோய் பரவாமல் தடுக்க, தனது பங்காக அவர்களிடம் இருந்து பெற்ற பணத்தை அவர்களுக்கு திருப்பி கொடுக்கிறேன்.

யாசகம் பெற்ற பணத்தை கரோனா நிவாரணமாக வழங்குவதால் செல்லும் இடமெல்லாம்ல மக்கள் என்னை கவுரவமாக பார்க்கிறார்கள், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x