Published : 17 Aug 2020 03:38 PM
Last Updated : 17 Aug 2020 03:38 PM
மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி என்பது மட்டும் ஜனநாயகம் அல்ல. அந்த ஆட்சி மக்கள் எளிதாக அணுகக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதைக் கருத்தில்கொண்டு, தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 8 புதிய மாவட்டங்களும், 100-க்கும் அதிகமான புதிய வட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரையிலான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதைப் போல, தலைமைச் செயலகத்தின் பணிகளும் பரவலாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தென்தமிழகத்தில் நீண்ட காலமாகவே இருக்கிறது. குறிப்பாக, மதுரை அல்லது திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இரண்டாம் தலைநகரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கென சில அமைப்புகள் தீவிரமாக இயங்கி வருகின்றன.
தென்னகத்தின் அவஸ்தையை தென்மாவட்டங்களில் பிறந்தவர்களால்தான் உணர முடியும் என்ற அடிப்படையில், அவர்கள் பல காரணங்களைப் பட்டியலிட்டும் வந்தார்கள். அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில், இந்தக் கோரிக்கையை புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, பாமக டாக்டர் ராமதாஸ், மூவேந்தர் முன்னணி கழகம் டாக்டர் சேதுராமன் போன்றோர் மட்டுமே வலியுறுத்தினார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை உதாரணம் காட்டிவந்தார்கள். திமுக, அதிமுக போன்ற வலுவான கட்சிகள் இக்கோரிக்கைகள் முளைக்கும்போதே அவற்றை நிராகரித்து வந்துள்ளன.
ஆனால், வரலாற்றிலேயே முதன்முறையாக அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்களே மதுரையில் இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். வருவாய்த்துறை அமைச்சரும், முதல்வருக்கு நெருக்கமானவருமான ஆர்.பி.உதயகுமார் இந்த கோரிக்கையை முன்வைக்க, சீனியர் அமைச்சர்களில் ஒருவரும் மதுரையைச் சேர்ந்தவருமான செல்லூர் கே.ராஜூவும் இன்று அதே கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒருபடி மேலே போய், இதுதொடர்பாக முதல்வரையும், துணை முதல்வரையும் வலியுறுத்தி தீர்மானமே போட்டு அனுப்பிவிட்டது. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதி நிச்சயமாக இடம்பெறும் என்று மதுரை அமைச்சர்கள் நம்பிக்கையுடன் கூறிவருகிறார்கள். பாஜகவும் இந்தக் கோரிக்கையை ஆதரித்திருக்கிறது. அக்கட்சியின் பொன்.ராதாகிருஷ்ணன், மதுரையில் நிர்வாக நகரம் அமைய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்கம் தாகூரும் இதை ஆதரித்திருக்கிறார்.
அரசியல் ரீதியாக சென்னை, திமுகவின் கோட்டை. இன்று சென்னை இவ்வளவு வேகமாக வளர்ந்ததற்கு திமுகவும் ஒரு காரணம். ஆனால், அதிமுகவுக்கு சென்னை மீது அவ்வளவு பற்று இருந்ததாகச் சொல்ல முடியாது. அதன் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் தென் தமிழகத்தில்தான் அதிக முறை போட்டியிட்டிருக்கிறார்கள்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, திருச்சியைத் தலைநகராக மாற்றும் முயற்சி கூட மேற்கொள்ளப்பட்டது. எனவே, அதிமுக இத்தகைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டால், தென் மாவட்டத்தினரின் வாக்குகளை எளிதாகக் கவர முடியும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஆனால், திமுகவுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார்கள் அவர்கள். இந்தக் கோரிக்கையை எதிர்த்தால், மதுரை மக்களின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட்ட குற்றச்சாட்டுக்கு திமுக ஆளாகலாம்.
மதுரையின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனைத் தொடர்பு கொண்டு, மதுரையை இரண்டாம் தலைநகராக்கும் அமைச்சர்களின் கோரிக்கை பற்றியும், ஒருவேளை, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதி இடம்பெற்றால் திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்றும் கேட்டோம்.
"மதுரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி நான். இந்த நகரம் மற்றும் இவ்வூர் மக்களின் வாழ்வாரத்தை மேம்படுத்துவது பற்றிய எந்தத் திட்டமாக இருந்தாலும் அதனை வரவேற்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. ஆனால், முழுமையாக ஒன்பதரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்து, மதுரைக்கு எதுவுமே செய்யாதவர்கள் ஆட்சி முடியப்போகிற நேரத்தில் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது முழுக்க முழுக்க ஏமாற்று அரசியல் என்கிறேன்.
வார்த்தைக்கு வார்த்தை, 'அம்மாவின் ஆட்சி' என்று சொல்கிறார்களே, இவர்கள் அந்த அம்மாவின் எந்த அறிவிப்பையாவது நிறைவேற்றி இருக்கிறார்களா? உதாரணமாக, ஜெயலலிதாவின் 'விஷன் 2023' திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாநகரங்களை உலகத்தரமான நகரங்களாக மாற்றுவோம் என்ற அறிவிப்பு இருக்கிறது. சட்டப்பேரவையில் என்னுடைய கன்னிப்பேச்சில் (2016) கூட, 'இந்தத் திட்டத்தில் மதுரையையும் சேர்க்க வேண்டும். மதுரையின் போக்குவரத்து, குடிநீர்த் தேவை, கழிவுநீர் வெளியேற்றம், வைகையைச் சீரமைத்தல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்' போன்ற கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆனால், இரண்டு அமைச்சர்கள் இருந்தும் அவர்கள் எதையுமே நிறைவேற்றவில்லை.
மதுரை என்றில்லை, தமிழ்நாட்டில் அவர்கள் அம்மா சொன்ன, 10-ல் ஒரு நகரத்தைக்கூட அவர்களால் உலகத்தரமாக மாற்ற முடியவில்லை. மாறாக, அரசின் கஜானாவைத் தேவையற்ற முறையில் காலி செய்துவிட்டு, கடன் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் இந்தாண்டு மொத்த வருவாய்ப் பற்றாக்குறை 85 ஆயிரம் கோடி ரூபாய் என்று முதல்வரே சொல்லியிருக்கிறார். அது உண்மையல்ல. என்னுடைய கணிப்பின்படி, 1 லட்சம் கோடி வருவாய்ப் பற்றாக்குறையில் இருக்கிறது தமிழ்நாடு.
இவர்களால் ஏற்கெனவே அறிவித்த திட்டங்களைக்கூட நிறைவேற்ற முடியாது என்கிறபோது, யாரை ஏமாற்றுவதற்காகப் புதிது புதிதாக திட்டங்களை அறிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மதுரைக்கு எதையுமே செய்யாத இவர்கள், இதை மட்டும் செய்யவா போகிறார்கள் என்ற எண்ணம்தான் மக்களிடம் இருக்கிறது. ஆனால், இவர்கள் சொல்கிற திட்டங்களை ஒருவேளை நிறைவேற்ற முயன்றால், சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில் அதனை நான் முழுமையாக ஆதரிப்பேன்" என்றார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.
திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவில் அங்கம் வகித்தவரும், தென்மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசுவிடம் இதுபற்றிக் கேட்டபோது, "தமிழகத்தில் இரண்டாவது தலைநகரை ஏற்படுத்துவது என்று அரசு முடிவெடுத்தால், அதற்கு முற்றிலும் தகுதியான நகர் மதுரைதான் என்பதே என்னுடைய கருத்து. மக்கள் அனைவரும் வந்து செல்வதற்கும் சரி, நகரை விரிவுபடுத்துவதற்கும் சரி மதுரைதான் பொருத்தமாக இருக்கும். எனவே, இந்தக் கோரிக்கையைத் தனிப்பட்ட முறையில் நானும் ஆதரிக்கிறேன்" என்றார் தங்கம் தென்னரசு.
இதற்கிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார் என்று தென் தமிழகம் உற்றுநோக்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT