Last Updated : 17 Aug, 2020 12:20 PM

 

Published : 17 Aug 2020 12:20 PM
Last Updated : 17 Aug 2020 12:20 PM

சிபிஐ சம்பந்தமான வழக்குகளில் மாவட்ட நீதிமன்றத்தில் எப்படி ஜாமீன் கோர இயலும்; அதை மாவட்ட நீதிமன்றம் அனுமதித்தது ஏன்?- உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

மதுரை

சிபிஐ சம்பந்தமான வழக்குகளில் மாவட்ட நீதிமன்றத்தில் எப்படி ஜாமீன் கோரி தாக்கல் செய்ய இயலும்; மாவட்ட நீதிமன்றம் அதனை அனுமதித்தது ஏன் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

நெல்லை மாவட்டம் கண்ணன்குளத்தைச் சேர்ந்த காவலர் முருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

அதில்," சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 1ஆம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறேன்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு வேறு ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக அரசு மருத்துவமனைக்குச் சென்று விட்டு சுமார் 8.15 மணியளவிலேயே காவல் நிலையம் வந்தேன். அப்போது ஜெயராஜ் பென்னிக்ஸ் மீதான தட்டச்சு செய்யப்பட்ட புகாரில் கையெழுத்திடுமாறு உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அவர் கட்டாயபடுத்தியதன் பெயரில், உயர் அதிகாரி கூறுவதை ஏற்க வேண்டும் என்ற காரணத்தினால் நானும் கையெழுத்திட்டேன். அதைத்தவிர வேறு எந்தச் செயலிலும் நான் ஈடுபடவில்லை.

வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்துவிட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவரிடம் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனக்கு ஜாமின் வழங்கும் பட்சத்தின் தலைமறைவாக மாட்டேன் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்றும் உறுதி கூறுகிறேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், சிபிஐ சம்பந்தமான வழக்குகளில் மாவட்ட நீதிமன்றத்தில் எப்படி ஜாமீன் கோரி தாக்கல் செய்ய இயலும்? அதனை எவ்வாறு நீதிமன்றம் அனுமதித்தது? என கேள்வி எழுப்பினார்.

சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், " ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரையும் காவல் நிலையத்திற்கு தலைமைக் காவலர் முருகனே அழைத்து வந்துள்ளார். 2 பேர் மீதான புகாரிலும் கையெழுத்திட்டுள்ளார். இது தொடர்பாக 35 பேரிடம் விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது முருகனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிபிஐயின் பதில்மனு அதிருப்தி அளிப்பதாக தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணை குறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும், சிபிஐ தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உள்ள நிலையில், மாவட்ட நீதிமன்றம் அது தொடர்பான ஜாமீன் வழக்குகளை விசாரிப்பது குறித்தும் நீதிமன்றம் விசாரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x