Published : 17 Aug 2020 11:46 AM
Last Updated : 17 Aug 2020 11:46 AM

மதுரையை 2-வது தலைநகராக்க வேண்டும் என்ற கனவு எம்ஜிஆருக்கு இருந்தது: அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரையை 2-வது தலைநகராக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கனவு என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையை 2-ம் தலைகராக்க குரல் எழுப்பியநிலையில் அவரைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூவும் மதுரையை 2-வது தலைநகராக்கும் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.

மதுரை முனிச்சாலை ஒபுளா படித்துறைப் பகுதியில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

அதனையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசியதாவது:

மதுரை அரசியல் தலைநகர்..

நிச்சயமாக மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும். அரசியல் தளத்தில் மதுரையே முதன்மையானது. தமிழகத் தலைநகராக சென்னை இருந்தாலும் அரசியல் தலைநகராக மதுரை உள்ளது. கலை அரசியல் என எந்த நிகழ்வாக இருந்தாலும் மதுரையில் தான் தொடங்கப்படும். எம்.ஜிஆர் நல்ல நோக்கத்தோடு மதுரையை 2-வது தலைநகராக்க விரும்பினார். ஆனால் அதனை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. மதுரையை தலைநகராக்கவே எம்ஜிஆர் உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்தினார். அதேபோல் எந்தவொரு முடிவையும் ஜெயலலிதா மதுரையிலேயே எடுப்பார்.

முதல்வர் சாதனையை செய்வார்..

ரூ.1200 கோடியில் மதுரை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. லோயர் கேம்பிலிருந்து நீர் கொண்டுவரும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ச்சியாக முதல்வர் பல சாதனைகளை செய்துள்ள நிலையில், 5 மாவட்டங்களை புதிதாகத் தொடங்கியுள்ளார். அதேபோல், மதுரையை தலைநகராக்கி முதல்வர் சாதனையை செய்வார்.

தொழில்களைப் பெருக்க வேண்டும் என்பதற்காகவே மதுரையைத் தலைநகராக்க வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ஒரு சில மாநிலத்திற்கு இரண்டு தலைநகர்கள் உள்ளன. முன்னர் திருச்சியை தலைநகராக்க எம்ஜிஆர் விரும்பினார். அப்போது மதுரையை இரண்டாவது தலைநகராக்க விரும்பினார். தற்போது அமைச்சர் உதயகுமார் விடுத்துள்ள கோரிக்கையை நாம் வரவேற்கிறோம்.

பாஜகவுக்கு பதிலடி..

அதிமுகவுக்குள் எவ்வித பேதமும் இல்லை. கட்சி கட்டுக்கோப்பாக உள்ளது. அரசு சிறப்பாக இயங்குகிறது. மதுரையில் பாஜக வெற்றிபெற்றால் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு இன்னோவா கார் பரிசு வழங்கப்படும் என அந்தக் கட்சியின் தலைவர் பேசியிருப்பது அக்கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்த. அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. அதிமுக தொண்டர்களுக்குப் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் அனைவருக்குமே பரிசு கொடுக்க வேண்டும். எந்த அறிவிப்பும் இல்லாமலேயே ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களும் ஒன்றிணைந்து கட்சியை வெற்றி பெற வைப்பார்கள்.

இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

தொழிற்சாலை பரவுலக்காக..

இதற்கிடையில், தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "சென்னையில் தான் அனைத்துத் தொழிற்சாலைகளும் உள்ளன. தொழிற்சாலை பரவலுக்கு 2-வது தலைநகரம் தேவை. அது மதுரையாக இருக்க வேண்டும். 2-வது தலைநகர் தொடர்பாக முதல்வர், துணை முதல்வர் உடனடியாக குழு அமைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x