Published : 03 May 2014 08:26 AM
Last Updated : 03 May 2014 08:26 AM

சதிகாரர்களைக் கண்டுபிடித்து தண்டிப்போம்: முதல்வர்

குண்டு வெடிப்பு சதிகார்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி, தக்க தண்டனை பெற்றுத் தருவோம் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து விவரம் புரியாமல், அரசியல் காழ்ப் புணர்ச்சியுடன் திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டி ருக்கிறார். தமிழகத்தில் தீவிரவாதம் தலைதூக்க விடாமல் இருப்பதில் அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.

கடந்த 34 மாதங்களாக பல்வேறு நடவடிக்கைகளை காவல் துறையினர் எடுத்து வருகின் றனர். பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை தமிழக போலீஸார் கைது செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதி ஜாஹீர் உசேனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ரயிலில் குண்டு வெடிப்பு

இந்நிலையில், பெங்களூர் குவாஹாட்டி ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்தபோது நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுவாக ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மத்திய அரசின் ரயில்வே பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. மாநில ரயில்வே காவல் படை, ரயில்வே பாதுகாப்புப் படையுடன் இணைந்து அங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ரயில் நிலையத்துக்குள்ளோ அல்லது ரயிலிலோ ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கும்போது, ரயில்வே பாதுகாப்புப் படையினரு டன் இணைந்து தமிழகக் காவல் துறையினர் புலன் விசாரணை மேற்கொள்வர். அந்த வகையில் தமிழகக் காவல் துறையினர் குண்டு வெடிப்பு குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ரயில் புறப்பட்டதிலிருந்து சென்னை வரை உள்ள ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

ஆந்திராவில் வெடித்திருக்கும்

மேலும் ரயிலில் வெடித்தது டைம்பாம் ஆக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ரயில் குறிப்பிட்ட நேரத்தில் சென்ட்ரல் வந்து, கிளம்பியிருந்தால் ஆந்திர மாநில எல்லையில் சென்று கொண்டிருக்கும்போது குண்டு வெடித்திருக்கும் என்றும் தாமதமாக வந்ததால் அது சென்னையில் வெடித்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், குண்டு தமிழகத்தில் வெடித்துள்ளதால், அது தமிழக காவல் துறைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று கூறியுள்ளார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிக்கப்படாத பைப் வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக கருணாநிதி கூறியுள்ளார். இதுமுற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இவர்கள் கூறும் கருத்துகளைப் பார்க்கும்போது, தீவிரவாதிகளிடமிருந்து நிறைய தகவல்கள் பெற்றுள்ளனரோ என்ற சந்தேகம்தான் எழுகிறது. அப்படி ஏதேனும் தகவல் பெற்றிருந்தால் அதை தமிழகக் காவல் துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தேசிய பாதுகாப்பு படை

இந்தச் சம்பவம் தொடர்பாக தேசியப் பாதுகாப்புப் படை, தேசிய புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றை மத்திய அரசு அனுப்புவதை தமிழக அரசு தடுத்து விட்டதுபோல சில பத்திரிகைகளில் செய்து வந்துள்ளன. மத்திய உள்துறையில் உள்ள ஒரு இடைநிலை அதிகாரி, தமிழக உள்துறைச் செயலாளரைத் தொடர்பு கொண்டு வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகளோ அல்லது குண்டுகளை செயலிழக்கச் செய்யும் குழுவோ தேவைப்படின் அனுப்புவதாகத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த உள்துறைச் செயலாளர், ஏதேனும் தேவையிருப்பின் உதவியைக் கோருவதாகக் கூறியுள்ளார். தற்போது தேசிய பாதுகாப்புக் குழுவினர் வந்து விசாரித்து வருகின்றனர்.

தனது ஆட்சிக் காலத்தில் 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் போன்றவற்றை தடுக்கத் தவறிய கருணாநிதிக்கு, இந்த ரயில் வெடிகுண்டு விபத்து பற்றி தமிழக அரசை குறைகூறத் தகுதியில்லை.குண்டுவெடிப்பில் ஈடுபட்ட சதிகாரர்களைக் கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, தக்க தண்டனை பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x