Published : 17 Aug 2020 09:51 AM
Last Updated : 17 Aug 2020 09:51 AM
பெற்றோரைப் பார்க்க இ பாஸ் கிடைக்காததால் சென்னையில் இருந்து தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் சைக்கிளில் கொடைக் கானல் சென்றார்.
கொடைக்கானல் மலைப்பகுதி பள்ளங்கியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(48). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் பள்ளங்கியில் உள்ள தனது பெற்றோரைப் பார்க்க இ- பாஸ் கேட்டு விண்ணப்பித்தும் அனுமதி கிடைக்கவில்லை.
இருப்பினும் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு சைக்கிளில் செல்ல முடிவு செய்தார். ஆக.12-ம் தேதி (புதன்கிழமை) காலை சென்னையில் இருந்து சைக்கிளில் புறப்பட்டார். நான்கு நாட்களில் சைக்கிளில் 526 கி.மீ. பயணம் மேற்கொண்டவர் நேற்று முன்தினம் மாலை கொடைக்கானல் வந்தடைந்தார். இதில் காட்டுரோடு பிரிவில் இருந்து கொடைக்கானல் வரை 50 கி.மீ. மலைச்சாலையில் மிகவும் சிரமத்துடன் சைக்கிளில் பயணித்தார்.
இதுகுறித்து வெங்கடேசன் கூறியதாவது: இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தும் கிடைக்காததால் பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் சைக்கிளில் செல்ல முடிவெடுத்தேன். சென்னையில் இருந்து கொடைக் கானல் வந்தடைய நான்கு நாட்கள் ஆனது. பெற்றோரைப் பார்த்ததும் 525 கி.மீ. சைக்கிளில் வந்த களைப்பு தெரியவில்லை. தற்போது கொடைக்கானலில் இருந்து சென்னை செல்ல இ-பாஸ் கிடைத்துவிட்டதால், சைக்கிளை ஊரில் விட்டுவிட்டு எனது பெற்றோரை காரில் அழைத்துக் கொண்டு சென்னை செல்ல உள்ளேன், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT