Published : 16 Aug 2020 01:52 PM
Last Updated : 16 Aug 2020 01:52 PM
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை பெற்றுக்கொண்டு, செயலாக்கம் செய்யாமல் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று (ஆக.16) வெளியிட்ட செய்தி அறிக்கை:
"தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிறந்த டிஜிட்டல் ஒளிபரப்பு கேபிள் டிவி சேவையை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இதுவரை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக மொத்தம் 35 லட்சத்து 97 ஆயிரத்து 479 செட்டாப் பாக்ஸ்களை வழங்கியுள்ளது. தற்பொழுது சந்தாதாரர்களுக்கு எஸ்.டி. செட்டாப் பாக்ஸ்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் 7 லட்சத்து 60 ஆயிரத்து 470 செட்டாப் பாக்ஸ்கள் செயலாக்கம் செய்யப்படாமல் உள்ளதாக தெரிகிறது. எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவை வழங்கும் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இந்த செட்டாப் பாக்ஸ்களை உடனே செயலாக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. செயலாக்கம் செய்ய இயலவில்லை என்றால், செயலாக்கம் செய்யப்படாத செட்டாப் பாக்ஸ்களை இந்நிறுவனத்திற்கு உடனே திருப்பி வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை இந்நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்டு, செயலாக்கம் செய்யாமல் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ்கள் அரசுக்கு சொந்தமானதாகும்.
எனவே, செயலாக்கம் செய்யப்படாமல் உள்ள செட்டாப் பாக்ஸ்களை உடனே செயலாக்கம் செய்ய வேண்டும் அல்லது இந்நிறுவனத்திடம் திருப்பி வழங்க வேண்டும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பொதுமக்களும் இந்நிறுவனத்தின் கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் உடனே திருப்பி செலுத்துமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT