Published : 23 Sep 2015 01:04 PM
Last Updated : 23 Sep 2015 01:04 PM
சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் முன்னோட்டமாக `நமக்கு நாமே விடியல் மீட்பு’ பயணத்தை மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் இருந்து நேற்று முன்தினம் தொடங்கினார். இப்போது அதற்கு ஈடாக பிரச்சாரத்தை தீவிரப்படுத்த அதிமுக களம் இறங்கியுள்ளது. இதற்கு அச்சாரமாக போஸ்டர் மூலம் பதிலடி தந்துள்ளது அக்கட்சி.
நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை ஆரல்வாய்மொழியில் இருந்து தொடங்கிய ஸ்டாலின், மாவட்டம் முழுவதும் சுற்றி வந்து விவசாயிகள், தொழிலாளர்கள் என பலதரப்பட்டவர்களையும் சந்தித்தார். இதற்கான ஏற்பாடு களை மாவட்டச் செயலாளர்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ் ஆகியோர் செய்திருந்தனர். மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி வருகை வெற்றிகரமாய் முடிந்தது என திமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதிமுக பதிலடி
இந்நிலையில் ஸ்டாலினின் வருகைக்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில், குமரி மாவட்ட அதிமுக இறங்கியுள்ளது. அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில்சம்பத் தலைமையில் பேச்சாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளனர்.
அதற்கு முன்னதாக போஸ்டர் ‘யுத்தம்’ தொடங்கிவட்டது. திமுக சார்பில் ஒட்டப்பட்டிருந்த நமக்கு நாமே விடியல் மீட்பு போஸ்டருக்கு பதிலடி அளிக்கும் வகையில், போஸ்டர் ஒட்டியுள்ளது அதிமுக.
அதில், “அதிமுகவுக்கு முடிவும் இல்லை. திமுகவுக்கு விடிவும் இல்லை. இதுதான் நமக்கு நாமே” என்று அச்சிடப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டங்கள்
மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் கூறும்போது, “ஸ்டாலின் வருகையால் கன்னியாகுமரியில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. லோக் ஆயுக்தா வேண்டும். ஊழலை ஒழிப்பேன்.
சட்டம், ஒழுங்கு சரியில்லை என ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், ஊழல்வாதிகளையும், சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்களையும் தனது அருகில் அவர் வைத்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் ஊழலுக்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஒரே அரசு திமுக தலைமையிலான அரசுதான்.
தேங்காய்ப்பட்டிணம், குளச்சல், சின்னமுட்டம் துறைமுகங்களுக்கு மாநில அரசின் நிதி பங்களிப்பை ஏற்கெனவே செலுத்திவிட்டோம். ஆனால் அங்கு சென்று துறைமுகப் பணிகளை பார்வையிட்டுள்ளார் ஸ்டாலின்.
குமரியில் மு.க.ஸ்டாலின் பயணித்த இடங்களில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆரல்வாய்மொழியில் முதல் கூட்டம் நடைபெறும். அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களிடம் தெரிவிப்போம். `திமுக முடியட்டும். தமிழகம் விடியட்டும்’ என்ற கோஷத்தை மக்களிடம் கொண்டு செல்வோம்” என்றார்.
திமுக கருத்து
மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோ தங்கராஜ் கூறும்போது, “ஸ்டாலின் பிரச்சாரத் தால் அதிமுகவின் கூடாரமே கதி கலங்கியுள்ளது. ஸ்டாலின் வருகையின்போது வழிநெடுகிலும் குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
கருங்கல்லில் சாலையோர கடையில் டீ குடித்த ஸ்டாலினை குமரியின் செல்லப் பிள்ளையாகவே இப்போது மேற்கு மாவட்ட மக்கள் பார்க்கிறார்கள். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுக்க திமுகவை நோக்கி மக்கள் வரத் தொடங்கிவிட்டனர்” என்றார்.
ஸ்டாலின் வருகை, அதற்கு பின்னர் நடைபெறப்போகும் அதிமுகவின் பொதுக்கூட்டங்கள் என குமரி மாவட்ட அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT