Published : 16 Aug 2020 11:51 AM
Last Updated : 16 Aug 2020 11:51 AM
சென்னை வியாசர்பாடியில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் திருவேங்கடம் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் மருத்துவர் திருவேங்கடம் என்பவர் 5 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். ஆரம்ப காலத்தில் அவர் 2 ரூபாய்க்கு மட்டுமே மருத்துவம் பார்த்து சேவையாற்றி வந்தார்.
இந்நிலையில், 70 வயதான திருவேங்கடம், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 13-ம் தேதி தெற்கு ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று (ஆக.15) மாரடைப்பு ஏற்பட்டு, அவர் நள்ளிரவில் காலமானார். இது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், பிரீத்தி என்ற மகளும் தீபக் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் வரை செல்போன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை அளித்து வந்துள்ளார்.
'மெர்சல்' திரைப்படத்தில் விஜய், 5 ரூபாய் மருத்துவராக நடித்தது திருவேங்கடத்தை முன்மாதிரியாக கொண்டதுதான் என சொல்லப்படுகிறது.
மருத்துவர் திருவேங்கடத்தின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.16) தன் ட்விட்டர் பக்கத்தில், "வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர் 'மக்கள் டாக்டர்' திருவேங்கடம்!
எளிய மக்களின் உயிர் காக்கும் அன்புக்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்" என பதிவிட்டுள்ளார்.
வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர் ‘மக்கள் டாக்டர்’ திருவேங்கடம்!
எளிய மக்களின் உயிர் காக்கும் அன்பிற்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/CWHq8tCtUu— M.K.Stalin (@mkstalin) August 16, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT