Published : 16 Aug 2020 08:00 AM
Last Updated : 16 Aug 2020 08:00 AM

திருச்செந்தூர் அருகே ரூ.2.46 கோடி ‘சாரஸ்’ போதைப் பொருள் பறிமுதல்: குமரி, நெல்லையை சேர்ந்த இருவர் கைது

திருச்செந்தூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட சாரஸ் போதைப் பொருளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பார்வையிட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ரூ.2.46 கோடி மதிப்பிலான ‘சாரஸ்' என்ற போதைப் பொருளை, போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, நாகர்கோவில் மற்றும் நாங்குநேரியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்செந்தூர் பகுதியில் சிலர்கஞ்சா கடத்துவதாக போலீஸாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. டிஎஸ்பி பாரத் மேற்பார்வையில், திருச்செந்தூர் உதவி ஆய்வாளர் ஸ்டீபன் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, திருச்செந்தூர்- பரமன்குறிச்சி சாலையில் உள்ள ஆவுடையார்குளத்தின் கரையில் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்துக்கிடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். வாகனத்தில் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 50-க்கும் மேற்பட்ட பொட்டலங்களில் காப்பி நிறத்தில் கட்டிகள் இருந்தன.அவற்றை பரிசோதித்த போது அவை ‘சாரஸ்' எனப்படும் பதப்படுத்தப்பட்ட கஞ்சா என்பது தெரியவந்தது.

மொத்தம் 24 கிலோ 660 கிராம் சாரஸ் போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.2.46 கோடியாகும். இதை கடத்திய, நாகர்கோவில் என்ஜிஓ காலனியைச் சேர்ந்த செந்தில் குமார் (43) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த துரைராஜ் (44) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில் போதைப் பொருளை மணி மற்றும் மகேஸ்வரன் ஆகிய 2 நபர்கள் தங்களிடம் கொடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளனர். போதைப் பொருளை எங்கிருந்து, யாருக்காக வாங்கினர்?, கடற்கரை வழியாக வெளிநாட்டுக்கு கடத்த கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் திருச்செந்தூர் வந்து, போதைப் பொருளை பார்வையிட்டார். துரித நடவடிக்கை எடுத்த போலீஸாரை, அவர் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x