Published : 15 Aug 2020 03:14 PM
Last Updated : 15 Aug 2020 03:14 PM
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களை நீதிபதிகள் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 74-வது சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது. உயர் நீதிமன்ற கிளை மத்தியத் தொழிலகப் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்ததில் இருந்து குடியரசு தின விழா, சுதந்திர தின விழா ஆகியன வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது சிஐஎஸ்எப் வீரர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், வீர சாகசங்கள், தற்காப்புப் பயிற்சிகள், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், உயர் நீதிமன்ற ஊழியர்கள், அவர்களின் குழந்தைகளுக்கான போட்டிகள் என விழா களைகட்டும்.
கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் இன்று சுதந்திர தின விழா எளிமையாகக் கொண்டாடப்பட்டது. நிர்வாக நீதிபதி எம்.சத்தியநாராயணன் தேசிய கொடி ஏற்றி, சிஐஎஸ்எப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். முன்னதாக நீதிபதிகள் கல்யாணசுந்தரம், நிஷாபானு, ஜி.ஆர்.சுவாமிநாதன், கிருஷ்ணகுமார், ஆர்.தாரணி, ஜி.ஆர்.சுவாமிநாதன், பாரதிதாசன், சுரேஷ்குமார், பொங்கியப்பன், ராஜமாணிக்கம் ஆகியோர் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் கரோனா பரவல் தடுப்புப் பணியில் முன்களத்தில் இருந்து பணிபுரியும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உயர் நீதிமன்றக் கிளை ஆங்கில மருத்துவப் பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள், உயர் நீதிமன்றக் கிளை தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி, பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு நீதிபதிகள் பரிசுகள் வழங்கி நன்றி தெரிவித்தனர்.
விழாவில் மதுரை மாவட்ட நீதிபதி நசிமாபானு, உயர் நீதிமன்றக் கிளை பதிவாளர்கள் தமிழ்செல்வி, தேவநாதன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேல், உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் என்.கிருஷ்ணவேனி, பொதுச் செயலர் என்.இளங்கோ, பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆனந்தவள்ளி, செயலர் சிவசங்கரி, வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் சுபாஷ்பாபு, மூத்த வழக்கறிஞர் வீரகதிரவன், வழக்கறிஞர்கள் ராஜாராம், தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT