Published : 15 Aug 2020 11:05 AM
Last Updated : 15 Aug 2020 11:05 AM

4-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததில் பெருமையடைகிறேன்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

நாட்டின் 74-வது சுதந்திர தினம், இன்று, ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே வந்திறங்கிய முதல்வர் பழனிசாமி தேசியக் கொடி ஏற்றினார்.

பிற்பாடு அவர் உரையாற்றினார், “நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்ததில் பெருமையடைகிறேன். மக்களின் அன்பு ஆதரவை பெற்றுள்ள நான் மக்களிடம் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்.

சுதந்திரத்தின் பலனை அனைவரும் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கரோனா தடுப்பு தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம்.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் கரோனா உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது. கரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கரோனாவை வெல்வோம் என்று உறுதிபடக் கூறுகிறேன்.

தமிழக அரசின் நிதி ஆதாரத்தைக் கொண்டு கரோனா தடுப்புப் பணிக்கு ரூ.6,650 கோடி செலவிடப்பட்டுள்ளது. வந்தேபாரத் மற்றும் சமுத்திர சேது இயக்கத்தின் மூலம் 64,661 வெளிநாடு தமிழர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

4.18 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு பத்திரமாக அனுப்பப்பட்டனர். சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் ஓய்வூதியம் 16,000 த்திலிருந்து ரூ.17,000 ஆக உயர்த்தப்படும். வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம், சிறப்பு ஊதியம் ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.8,500 ஆக உயர்த்தப்படும்.

சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிட பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை எதிர்கொள்ள 1,29,000 படுக்கைகள் தயாராக உள்ளன.

கொரோனாவை எதிர்கொள்ள 1800 மருத்துவர்கள், 7 ஆயிரம் செவிலியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதம் முதல் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
விரைவில் பொருளாதார இயல்பு நிலையை தமிழகம் எட்டும்.” என்று பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x