Published : 15 Aug 2020 10:57 AM
Last Updated : 15 Aug 2020 10:57 AM
ஓசூர் வனக்கோட்டத்தில் வனச்சரகங்களை ஒட்டியுள்ள மலைக் கிராமங்களில் வசிக்கும் கிராம மக்கள் உரிமம் இன்றி வைத்திருந்த 19 நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
ஓசூர் வனக் கோட்டத்தில் மலைக் கிராமங்களில் உரிமம் இன்றி வைத்திருக்கும் நாட்டுத் துப்பாக்கிகளைத் தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட வனத்துறை சார்பில் மலை கிராமங்கள்தோறும் ஒலிப்பெருக்கி மூலமாக எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 4-ம் தேதி அன்று முதல் கட்டமாக அஞ்செட்டி மற்றும் உரிகம் ஆகிய இரண்டு வனச்சரகங்களில் வசிக்கும் கிராம மக்கள் உரிமம் இன்றி வைத்திருந்த 10 நாட்டுத் துப்பாக்கிகளைத் தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது இரண்டாவது கட்டமாக உரிகம் வனச்சரகத்தில் - 6, தேன்கனிக் கோட்டை வனச்சரகத்தில் -12, ஓசூர் வனச்சரகத்தில் -1 என மொத்தம் 19 உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஓசூர் வனக்கோட்ட வன உயிரினக் காப்பாளர் செ.பிரபு தலைமையில், உதவி வனப் பாதுகாவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், தேன்கனிக்கோட்டை சங்கீதா ஆகியோர் முன்னிலையில் மலை கிராம மக்கள் தாமாக முன்வந்து 19 நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்வின் போது தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் சுகுமார், உரிகம் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம், ஓசூர் வனச்சரக அலுவலர் ரவி, அஞ்செட்டி வனச்சரக அலுவலர் சீதாராமன் மற்றும் மலை கிராம மக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT