Published : 28 Feb 2014 06:52 PM
Last Updated : 28 Feb 2014 06:52 PM
அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் ஆம் ஆத்மி கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தார். “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்” என்று உதயகுமார் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையில் லூர்துமாதா ஆலயத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பந்தலில் கடந்த 30 மாதங்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்ட பந்தலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் புனித அந்தோணியார் ஆலயத்தின் முன்பகுதியில் உதயகுமார், போராட்டக் குழு நிர்வாகிகளில் ஒருவரான மை.பா.ஜேசுராஜ் உள்ளிட்டோர் ஆம் ஆத்மி கட்சியில் இணையும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆம் ஆத்மி மாநில தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் டேவிட் வருண்குமார் தாமஸ் கட்சியின் அடையாளமான, ‘குல்லாவை’ உதயகுமாருக்கும், ஜேசுராஜுக்கும் தலையில் அணிவித்தார். உறுப்பினர் படிவங்களையும் நிரப்பி அவர்கள் அளித்தனர்.
டேவிட் வருண்குமார் தாமஸ் கூறியதாவது: உதயகுமார் உள்ளிட்டோர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந் திருப்பதால், தமிழகத்தில் கட்சி பலம் பெற்றிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உதயகுமார், ஜேசுராஜ் ஆகியோர் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்றார்.
செய்தியாளர்களிடம் உதயகுமார் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியில் இணைய 5 நிபந்தனைகளை விதித்திருந்தோம். அணு உலைகளை அமைக்குமுன் அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்ட பின்னரே முடிவு செய்ய வேண்டும். கட்சியின் தேசிய கமிட்டியில் தமிழர்களுக்கு இடம் அளிக்க வேண்டும். பரவலாக்கப் பட்ட தலைமை கட்சியில் இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனை களை கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். கடந்த 2 ஆண்டாக முடங்கியிருந்தோம். தற்போது அடுத்த கட்டத்துக்கு பயணிக்க இருக்கிறோம். அரசியலில் இருந்துகொண்டே அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.
அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை இடிந்தகரையில் பெண்கள் ஒருங்கிணைந்து நடத்த வுள்ளனர். நாங்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைவர்கள் முடிவு செய்வர் என்றார் அவர். அரசியல் கட்சியில் இணைந்துள்ளதால் போராட்டக் குழுவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப் படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “அரசியல் பிரவேசத்தை ஒருசிலர் விரும்ப வில்லை. நாங்கள் அரசியல் கட்சியில் இணைந்து தொடர்ந்து அணுஉலைக்கு எதிராக போராடுவோம். போராட்டக் குழுவில் பிளவு ஏதும் இல்லை” என்றார் அவர்.
முன்னரே தெரிவித்தது ‘தி இந்து'
சுப.உதயகுமார் ஆம் ஆத்மி கட்சியில் இணையவுள்ளதை ‘தி இந்து' ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, அவர் அக்கட்சியில் நேற்று இணைந்ததுடன் அந்த அமைப்பின் உதயகுமார் உள்ளிட்ட சிலர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள தகவலும் செய்தியில் வெளியானபடி உறுதியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT