Published : 15 Aug 2020 07:48 AM
Last Updated : 15 Aug 2020 07:48 AM

நாட்டின் 74-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: ஆளுநர், கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை

நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: இன்றைய இந்தியா, நாடுகளிடையே பரஸ்பர நல்லிணக்கத்தை உருவாக்குவதில் பெருமையுடன் முன்னணியில் அணிவகுத்து நிற்கிறது. நம் தேசமானது சுயசார்புடையது. அதே வேளையில், அதன் அரசியல் தலைமை, பொருளாதார வளர்ச்சி, ஆழ்ந்த கலாச்சார வேர்கள் மற்றும் சமூக ஒத்திசைவுக்காக உலகம் முழுவதிலும் நன்கு மதிக்கப்படுகிறது.

இனிய இந்த சுதந்திர நன்னாளில் உண்மையான அர்ப்பணிப்புடனும் சேவை மனப்பான்மையுடனும் நாட்டின் வளர்ச்சிக்காக நம்முடைய ஒருங்கிணைந்த ஆற்றல் அனைத்தையும் முழுமையாக அர்ப்பணிக்க உறுதி எடுத்துக் கொள்வோம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: சுதந்திர தின விழாவில் காந்தியடிகள் தலைமையில் விடுதலைக்காக போராடிய தியாகிகளை நினைவு கூர்ந்து அவர்களை போற்றும் வகையில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவோம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை அடைந்த நாம், வறுமையில் இருந்தும் விடுதலை அடைய வேண்டும். அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம், அடித்தட்டு மக்களுக்கு நீதி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி ஆகியவை சாத்தியமாகும் நிலை உருவாக வேண்டும். அத்தகைய நிலையை உருவாக்க உழைப்பதற்கு இந்த விடுதலை நாளில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

பெரம்பலூர் எம்.பி. டாக்டர் பாரிவேந்தர்: உலகின் மிகப் பெரிய மக்கள் தொகையைக் கொண்ட மக்களாட்சி நடைபெறும் நாடாக இந்தியா திகழ்கிறது. இத்தகு மேன்மையை நம் இந்தியத் திருநாடு பெறுவதற்காக, தங்களின் இன்னுயிரை ஈந்து நமக்காக பாடுபட்ட பல்லாயிரம் தியாகிகளை நினைவுகூர்வோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்: நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி, முற்போக்கு சக்திகள் ஒருங்கிணைந்து வகுப்புவாத, மதவெறி சக்திகளை முறியடிக்க சுதந்திர தினத்தில் உறுதி ஏற்போம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: சுதந்திரம், ஜனநாயகம், மதநல்லிணக்கம், மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, கூட்டாட்சி, மாநில உரிமைகள், பெண்ணுரிமை, பன்முகத் தன்மை போன்ற அரசியல் சாசனத்தின் விழுமியங்களை பாதுகாக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் தொடர் முயற்சியும், நமது பங்களிப்பும் இந்திய நாட்டுக்கும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். மத்திய அரசு இந்நாட்டின் பாதுகாப்புக்கும், முன்னேற்றத்துக்கும் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாம் அனைவரும் துணை நிற்போம்.

சமக தலைவர் சரத்குமார்: ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை மனதில் கொண்டு இந்திய தேசத்தின் பெருமைமிகு மாண்பையும் வரலாற்றையும் தாங்கி நிற்கும் ஒருமைப்பாட்டுக்கும், பன்முகத்தன்மைக்கும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் அடித்தள ஆணிவேரையும், எந்தச் சூழலிலும் எவராலும் அசைக்க முடியாது என்பதை உரக்கக் கூறி, பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதி ஏற்போம்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஜனநாயக பாதையில் பயணித்து அனைத்து தரப்பு மக்களும் சமூக மற்றும் பொருளாதார ரீதியிலும் சமத்துவம் பெறுவதற்கு ஒன்று பட்டு உழைத்திடுவோம் என இச்சுதந்திரத் திருநாளில் உறுதி ஏற்போம்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x