Published : 15 Aug 2020 07:36 AM
Last Updated : 15 Aug 2020 07:36 AM

பொது இடங்களில் சிலை வைத்து வழிபட அனுமதி மறுப்பு; தடையை மீறி விநாயகர் சிலை அமைப்போம்: இந்து முன்னணி அமைப்பினர் அறிவிப்பு

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர்.

காஞ்சிபுரம்

காஞ்சியில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் பொன்னையா தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளதால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி விழா கொண்டாடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதிக்க இயலாது. சிறிய கோயில்களில் வழிபாடு நடத்தலாம். அங்கும் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் அமைதியான முறையில் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா உட்பட இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ஆர்.டி.மணி,மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.ஆர்.ராஜா, சரவணன், நகரத் தலைவர் சி.கோபி, நகர பொதுச் செயலர் ஏ.எஸ்.சந்தோஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் இந்து முன்னணியினர் கூறியதாவது: பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி இல்லை எனஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை அமைக்க அனுமதி வேண்டும். அந்த இடங்களில் 4 பேருக்கு மேல் கூடாமலும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வழிபாடு நடத்தப்படும் எனக்கூறி இந்து முன்னணி சார்பில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.

விநாயகர் சதுர்த்தியன்று தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடஉள்ளோம். அனுமதி அளிக்காவிட்டால் தடையை மீறி சிலைகளை அமைப்போம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x