Published : 15 Aug 2020 07:12 AM
Last Updated : 15 Aug 2020 07:12 AM
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இதனால் விநாயகர்சிலை தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பிறகு அதுஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கரோனா அச்சத்தால் ஊரடங்கு அமலில் இருப்பதால், வரும் 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதி கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆரணி பகுதியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தெரிவித்ததாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி, ஊத்துக்கோட்டை, காக்களூர் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். எலி, மான், சிங்கம், புலி போன்ற வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது; சிவன், பார்வதியுடன் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற வடிவங்களில் மூன்றடி முதல், 15 அடி வரைவிநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வண்ணம் அடித்தல் உள்ளிட்ட 10 சதவீத பணிகளே இருக்கின்றன.
இந்நிலையில், விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி கிடையாது என, அரசு அறிவித்துள்ளது. இதனால், ரூ.3 ஆயிரம் முதல்ரூ.20 ஆயிரம் வரை விற்பனையாகக் கூடிய நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேங்கும். அவ்வாறு தேங்கினால், கடன் வாங்கி விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும்.
ஆகவே, விநாயகர் சதுர்த்தி விழாவை நம்பி, தொழிலில் ஈடுபட்டு வருவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT