Published : 14 Aug 2020 08:18 PM
Last Updated : 14 Aug 2020 08:18 PM
பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சை மாவட்ட துணை தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ஜீவஜோதி. கடந்த ஓராண்டுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த ஜீவஜோதி சத்தமில்லாமல் கட்சி வேலைகளை பார்த்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பதவி வழங்கப் பட்டுள்ளது. அவருக்கு பதவி கொடுக்க எஸ்.கே. வேதரத்தினமும் ஒரு காரணம்.
வேதாரண்யம் பகுதியில் பாஜகவிற்கு மிகப்பெரிய சக்தியாக இருந்த எஸ்.கே வேதரத்தினம் பாஜகவை கை விட்டு திரும்பவும் திமுகவிற்கு திரும்பியதால் வேதாரண்யம் பாஜக கூடாரம் வெறிச்சோடியது. அதனை நிவர்த்தி செய்யும் விதமாக நாடறிந்த ஒரு முகத்தை அங்கே களமிறக்க திட்டமிட்ட பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் ஜீவஜோதியைய் களமிறக்கினார்.
முதல் கட்டமாக கடந்த வாரத்தில் வேதாரண்யம் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பாஜக கொடியை ஏற்றிய ஜீவஜோதி ,-கருப்பு முருகானந்தம் கூட்டணி வேதாரண்யம் அரசியலை சுறுசுறுப்பாகிறது. அப்போதே ஜீவஜோதிக்கு கட்சியில் ஏதாவது ஒரு முக்கிய பதவி அளிக்கப்படும் என்ற பேச்சு கிளம்பியது.
அது இன்றைக்கு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. கட்சியின் மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ மாவட்டத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியலை இன்று அறிவித்திருக்கிறார். அதில் மாவட்ட துணைத் தலைவராக ஜீவஜோதிக்கு பதவி அளிக்கப் பட்டிருக்கிறது.நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்த ஜீவஜோதியிடம் வாழ்த்து சொல்லி பேசினேன்.
"என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கப் பட்டிருக்கிறது. மாநில துணைத் தலைவர் அண்ணன் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ உள்ளிட்ட கட்சியின் மூத்த முக்கிய நிர்வாகிகள் என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள். இதில் எவ்வளவு சிறப்பாக பணியாற்ற முடியுமோ அப்படி பணியாற்றி கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
அரசியலுக்குள் ஆர்வத்தோடு இறங்கியிருக்கும் ஜீவஜோதி அரசியல் சித்து விளையாட்டுக்களை எல்லாம் சமாளித்து கரை சேருவாரா? என்பது போக,போகத்தான் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT