Published : 14 Aug 2020 01:31 PM
Last Updated : 14 Aug 2020 01:31 PM
கரோனா ஊரடங்கு முடியும் வரை உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய ஸ்பின்னிங் மில் அசோசியேசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில், கரோனா ஊரடங்கு காரணமாக மூன்று மாதங்களுக்கு மேலாக அனைத்து மில்களும் மூடப்பட்டு உள்ளதாகவும் மேலும் தொழிலாளர்கள் வேலைக்கு வருவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். பொருளாதார ரீதியில் அனைத்து நிதி நடவடிக்கைகளும் முடங்கிப்போய் உள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதேபோல, உயர் மின் அழுத்தம் பயன்படுத்தக்கூடிய மற்ற தொழில் நிறுவனங்கள் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
ஆனால், தமிழ்நாடு மின்வாரியம் உயர் அழுத்த மின் கட்டணத்தை முழுமையாக செலுத்தும்படி நிர்பந்திப்பதாகவும் எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும், குறைந்தபட்ச உயர்மின் அழுத்தத்திற்கான 20 சதவீதத்தை மட்டும் கட்ட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
வழக்கை இன்று (ஆக.14) விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உயர் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஸ்பின்னிங் மில் ஆலைகள் மற்றும் வழக்கு தொடர்ந்துள்ள மற்ற தொழில்நிறுவனங்களிடமிருந்து, 20 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று மின் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
கூடுதலாக வசூலித்து இருந்தால் வரும் காலங்களில் உள்ள மின் கட்டணத்தில் சரிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு முடியும் வரை இந்த உத்தரவு பொருந்தும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மில் அலுவலகங்களில் மற்ற நிர்வாக பயன்பாட்டுக்கான மின் கட்டணத்திற்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT