Published : 14 Aug 2020 11:24 AM
Last Updated : 14 Aug 2020 11:24 AM
ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம். திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர்.
கு.க.செல்வம், திமுக மாவட்டச் செயலாளராகப் பல முறை முயன்றார். ஜெ.அன்பழகன் மறைவுக்குப் பின் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வாய்ப்பு தனக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், சிற்றரசு நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த கு.க.செல்வம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மூலம் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை டெல்லியில் சந்தித்தார்.
அப்போது ஸ்டாலினை விமர்சித்துப் பேட்டியும் அளித்தார். இதனால் அவரை இடைநீக்கம் செய்த திமுக தலைமை அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், கமலாலயம் சென்று ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிலும் கு.க.செல்வம் கலந்துகொண்டார். கு.க.செல்வம் பாஜகவில் இணைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவரது விளக்கத்தை நிராகரித்துள்ள திமுக, அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நேற்று (ஆக.13) நீக்கியது.
இந்நிலையில், இன்று (ஆக.14) சென்னை, நுங்கம்பாக்கத்தில் கு.க.செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன்னை திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சி என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் பாஜகவின் ஆதரவாளராக செயல்படுவீர்களா?
இன்னும் அதுகுறித்து முடிவெடுக்கவில்லை.
அடுத்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவீர்களா?
தெரியாது.
ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவீர்களா?
திமுக சார்பாக நின்று போட்டியிட முடியாது. வேறு எந்த கட்சியாவது வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன்.
அடுத்த தேர்தலில் பாஜக - திமுகவுக்கும் இடையே போட்டியா?
அவர்கள் விருப்பப்பட்டு இப்படி சொல்கின்றனர். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று தோற்றிருக்கிறார். திமுகவின் சார்பாக நின்று போட்டியிட்ட ஜின்னாவும் தோற்றிருக்கிறார். நான் வெற்றி பெற்றிருக்கிறேன். மீண்டும் அத்தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
துரைமுருகன் உங்களை விமர்சித்துள்ளாரே?
அவர் பேசவில்லை. அவரை பேச வைக்கின்றனர். துரைமுருகன் இரு நிலைப்பாட்டில் உள்ளார்.
உங்களை கட்சியிலிருந்து திடீரென நீக்கியுள்ளார்களா?
எனக்கு நோட்டீஸ் வரவில்லை. இது ஜனநாயகப் படுகொலை. நீக்கியவுடன் மறுநாளே பதில் கொடுத்தேன்.
திமுகவில் மூத்தத் தலைவர்கள் அதிருப்தியில் இருக்கின்றனரா?
மூத்தத் தலைவர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். அவர்கள் யாரென்று இப்போது சொல்ல முடியாது. அவர்களின் பெயரை சொன்னால் அவர்களையும் கட்சியிலிருந்து நீக்கிவிடுவார்கள். அவர்களும் வெளியில் வருவார்கள்.
திமுக உதயநிதி கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதா?
அதைத்தான் முன்பும் சொன்னேன். இப்போதும் அதையே சொல்கிறேன்.
ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சி சென்றுள்ளது என்றுள்ளீர்களே?
இப்போதும் அதை வழிமொழிகிறேன்.
இந்த குழப்பங்களுக்கு உதயநிதியின் குறுக்கீடு தான் காரணமா?
என் விஷயத்தில் அவரின் தலையீடு தான் காரணம்.
வடபழனியில் அண்ணா பொது நல மன்றம் இருக்கிறது. 10 ஆண்டுகளாக 18 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறேன். பல பணிகளை செய்திருக்கிறேன். நான் அந்த மன்றத்தைப் பாதுகாத்து வருகிறேன். நேற்று திமுகவினர் அந்த மன்றத்தைக் கையகப்படுத்த முயற்சித்தனர். இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். மிரட்டல் வருவது சகஜம் தான். ஆனால் போலீஸ் பாதுகாப்பு கேட்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...