Published : 14 Aug 2020 08:50 AM
Last Updated : 14 Aug 2020 08:50 AM
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்பியும் தமாகா மாநில துணைத் தலைவருமான ஏ.எம்.வேலு நேற்று காலமானார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை காலமானார். இதையடுத்து, சோளிங்கரில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளின்படி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரான ஏ.எம்.வேலுவின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
மு.க.ஸ்டாலின்: அரக்கோணம் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.எம்.வேலு மறைந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது மறைவுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ், தமாகா சார்பில் இருமுறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், தொகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்றியவர். கருணாநிதியின் அன்பை பெற்றவர்.
கே.எஸ்.அழகிரி: மக்களவை முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.வேலு மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன். நீண்ட நெடுங்காலமாக வேலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக அவரது குடும்பமே அர்ப்பணித்துக் கொண்டது. இவரும் கட்சி வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜி.கே.வாசன்: முன்னாள் மக்களவை உறுப்பினரும், தமாகா தேர்தல் முறையீட்டு குழு தலைவருமான ஏ.எம்.வேலு மறைவு செய்தியறிந்து வேதனை அடைந்தேன். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த அவர், கட்சியின் அடிமட்டதொண்டர்வரை அனைவரிடமும் அன்பாக பழகியவர். தமாகாவுக்குபலம் சேர்த்தவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT