Published : 13 Aug 2020 09:07 PM
Last Updated : 13 Aug 2020 09:07 PM
சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் சுதந்திர தின விழா நாளை (ஆக.15) கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அதிகளவில் கூடாமல் சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் வழக்கம் போல் தருவை மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பங்கேற்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மாலையில் தருவை மைதானத்தில் நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகையில் எஸ்பி கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 96 முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 18 நெடுஞ்சாலை காவல் ரோந்து குழுக்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் 38 சிறப்பு ரோந்துக் குழுக்கள் அமைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்பநாய் படை பிரிவினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட எல்லைப் பகுதிகளில் 18 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழா நடைபெறவுள்ள தூத்துக்குடி தருவை மைதானத்திற்கு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் எஸ்பி.
இதேபோல் தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் ரோந்து படகுகள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து கப்பல்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT