Published : 13 Aug 2020 09:13 PM
Last Updated : 13 Aug 2020 09:13 PM
செய்யூர் இளம்பெண் சசிகலா மரண வழக்கில் சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கில் செய்யூர் போலீஸார் உரிய விசாரணை நடத்தி 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும், அதை செங்கல்பட்டு எஸ்பி கண்காணிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த நைனார்குப்பத்தை சேர்ந்த சசிகலா என்ற 24 வயது இளம்பெண் ஜூன் 24-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி தேவேந்திரன் அளித்த தகவலின் அடிப்படையில், செய்யூர் காவல் நிலையத்தினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
பிரேத பரிசோதனை மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் முடிந்த நிலையில், சசிகாலாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நிலையில், தனது தங்கையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சசிகலாவின் சகோதரர் அருண்பாபு புகார் அளித்தார்.
தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருஷோத்தமன் ஆகிய இருவரும் தன் தங்கையை கொலை செய்து விட்டு நாடகமாடியதாக குற்றம் சாட்டியிருந்தார். தங்கை சசிகலா குளிக்கும்போது வீடியோ எடுத்துவைத்து, அதை வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி இருவரும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் சசிகலாவின் தோழிகள் அளித்த தகவலின் அடிப்படையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக தேவேந்திரன், புருஷோத்தமன் ஆகியோர் திமுக-வில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர், புருஷோத்தமன் கைது செய்யப்பட்ட நிலையில், தேவேந்திரன் சரணடைந்தார்.
இந்நிலையில், மகள் சசிகலாவின் மரணம் குறித்த செய்யூர் காவல் நிலைய வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தாயார் சந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் மனுவில், “சசிகலா மரண தொடர்பான வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக மட்டுமே புருஷோத்தமன் மற்றும் தேவேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு செய்யூர் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர். விசாரணை முறையாக இல்லை.
இருவரும் என் மகளை நிர்வாண வீடியோ எடுத்தது, பாலியல் தொல்லை கொடுத்தது வன்கொடுமை செய்தது, மரணம் விளைவித்தது போன்ற காரணங்களுக்காக அது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை நடத்துவது, இருவரையும் வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கும் காவல்துறை முயற்சி.
இருவரையும் குண்டர் சட்டத்தில், அடைப்பதற்கும் போதிய முகாந்திரம் இருக்கிறது, ஆனால போலீஸார் சரிவர வழக்கை கையாளவில்லை” என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரிக்கவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில் அளித்த பதிலில், “தொடக்கத்தில் இந்த வழக்கு தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு இருந்தது, பின்னர் தற்கொலைக்கு தூண்டியதாக புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வரப்படுகிறது.
இந்த வழக்கின் விசாரணைக்கு தற்கொலை செய்து கொண்ட சசிகலாவின் உறவினர்கள் சிலர் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை”. எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதி, சசிகலாவின் உறவினர்கள் சுமன், அரவிந்த், சுரேஷ் ஆகியோர் செய்யூர் காவல் நிலைய விசாரணைக்கு ஆஜராகி, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் செய்யூர் காவல் நிலையம் தொடர்ந்து விசாரணையை நடத்த அனுமதியளித்த நீதிபதி, சாட்சிகள், ஆவணங்கள் அடிப்படையில் விசாரணையை நடத்தி 12 வாரத்தில் இறுதி விசாரணை அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், இந்த வழக்கின் முழு விசாரணையையும் செங்கல்பட்டு மாவட்ட எஸ் பி கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT