Published : 13 Aug 2020 08:40 PM
Last Updated : 13 Aug 2020 08:40 PM

பாரம்பரிய முறையில் ரூ.3.60 கோடியில் புதுப்பிப்பு: புதுப்பொலிவு பெறும் மதுரை திருமலைநாயக்கர் அரண்மனை

மதுரை

நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த மதுரை திருமலை நாயக்கர் மகால் ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் அதன் பழைமை மாறாமல் பாரம்பரிய முறைப்படி புதுப்பிக்கப்படுகிறது.

தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள எழில் வாய்ந்த பண்டைய அரண்மனைகளில் மதுரை திருமலைநாயக்கர் அரண்மனை முக்கியமானது.

இத்தாலிய கட்டிடப் பொறியாளரால் வடிவமைக்கப்பட்டு திருமலைநாயக்கரின் ரசணையில் உருவான இந்த அரண்மனைக் கட்டிடம், மதுரை வரும் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வருகிறது.

கடைசியாக பிரிட்டிஷார் ஆட்சியில் 1860ல் இந்த அரண்மனை புதுப்பிக்கப்பட்டது. இந்த அரண்மனையின் 58 அடி உயரம் கொண்ட 248 தூண்களும் , கலைவேலைப்பாடு மிக்க மேற்கூரையும் பார்ப்போரைப் பரசவம் கொள்ள வைக்கும்.

தொல்லியல்துறையால் இந்த அரண்மனை பாராமரிக்கப்படுகிறது. வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள், இந்த அரண்மனையை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த காலத்தில் பல புகழ்பெற்ற சினிமா படங்களின் படப்பிடிப்பும் இந்த அரண்மனையில் நடந்தது. அரண்மனையை பராமரிக்கும் தொல்லியல்துறையில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் இதன் பராமரிப்பு கேள்விகுறியானது.

பிரம்மாண்ட தூண்கள் சேதமடைந்து மேற்கூரை பழுதடைந்து மழைநீர் ஒழுகியது. மேலும், அரண்மனையை பார்வையிட வரும் சுற்றுலாப்பயணிகள், தூண்களிலும், சுவர்களிலும் கிறுக்கி சென்றதால் அவை சேதமடைந்தன.

திரும்பிய பக்கமெல்லாம் குப்பையும், தூசிபடிந்த கட்டிடமும் அதன் அழகை இழந்தது. பாதுகாப்பாக போற்றப்பட வேண்டிய திருமலைநாயக்கர் அரண்மனை கட்டிடங்களும் ஆங்காங்கே சிதலமடைந்தது.

அதனால், சுற்றுலாப்பயணிகளிடம் வரவேற்பு இழந்த இந்த அரண்மனை பார்வையாளர்களையும் இழந்தது. ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேர் வந்து சென்ற இந்த அரண்மனைக்கு சமீப காலமாக வெறும் 300 பேர் வருவதே அபூர்வமானது.

இந்நிலையில் இந்த அரண்மனை தொல்லியல்துறை சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் ரூ.3.60 கோடியில் அதன் பழமை மாறாமல் பராம்பரிய முறைப்படி பராமரிக்கப்படுகிறது.

இதுகுறித்து தொல்லியல்துறையின் திருமலைநாயக்கர் அரண்மனை உதவி செயற்பொறியாளர் கூறுகையில், ‘‘பணிகளை டிசம்பரில் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். உடைந்த தூன்களையும், மேற்கூரையும் முழுக்க முழுக்க சுண்ணாம்பு, பனை கருப்பட்டி, கடுக்காய் பொடி கரைசல் கொண்டு பாரம்பரிய முறைப்படி புதுப்பிக்கப்படுகிறது.

இதற்காக கழுகுமலையில் இருந்து பிரத்தியேகமாக தயார் செய்த சுண்ணாம்புக் கலவை கொண்டு வரப்படுகிறது.

அதுபோல், கட்டுமானத்திற்கு தேவையான ஆற்று மணல், கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொண்டு வரப்படுகிறது. முன்பு சில காலத்திற்கு முன் சிமெண்ட் பூச்சி கொண்டு உடைந்த தூண்கள் சரிசெய்யப்பட்டன.

அது பலனளிக்காததால், இந்த கட்டிடம் கட்டிய பராம்பரிய முறைப்படியே தற்போது கட்டப்படுகிறது. சேதமடைந்த மேற்கூரையில் தட்டு ஓடுகள் பதிக்கப்படுகிறது.

அரண்மனைக்கு அதிகளவு புறாக்கள் வருவதால் அதன் எச்சங்கள் தூண்களையும், மேற்கூரையும் நாசம் செய்து சென்றுவிடுகிறது. அவை வராமல் தடுக்க பிரிட்டிஷார் ஆட்சியில் போட்டதுபோல் மேற்கூரை, பக்கவாட்டில் உள்ள ஜன்னல்களில் வலை போடப்படுகிறது.

பக்கவாட்டு ஜன்னல்களில் இரும்பு வலையும், மேற்கூரையில் நைலான் வலையும் அமைக்கப்படுகிறது. கட்டுமானப்பணி முடிந்தால் திருமலைநாயக்கர் அண்மனை மீண்டும் பழயை பொலிவு நிலைக்கு திரும்பும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x