Published : 13 Aug 2020 07:58 PM
Last Updated : 13 Aug 2020 07:58 PM

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகிவிட்டதா பாஜக?- மதுரையில் சுவர் விளம்பரம் செய்வதால் அதிமுகவினர் அதிருப்தி  

மதுரை

சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்புத் தொடங்குவதற்கு முன்பே மதுரையில் அதிமுகவினருக்கு சவால்விடுக்கும் வகையில் பாஜகவினர் சுவர் விளம்பரம் செய்யத் தொடங்கிவிட்டனர். அது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும் போட்டியிட்டன. பாஜக, தேமுதிக, பாமக கட்சிகள் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றன.

மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் உள்ளிட்ட மற்றக் கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. தற்போது வரை இந்தக் கட்சிகள், அதிமுக மற்றும் கூட்டணியில் இந்த கூட்டணி அமைப்பிலே தொர்கின்றன.

அதனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல் அதிமுகவும், மத்தியில் ஆளும் பாஜகவை அனுசரித்தே தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகிறது.

இந்நிலையில் அதிமுகவில் மட்டுமில்லாது அதன் கூட்டணியிலும் தற்போது பரப்பு வாதங்களும், சொற்போர்களும் தொடங்கியுள்ளன.

அதிமுகவில் சட்டப்பேரவைத் தேர்தலில் யாரை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்துவது என்று அக்கட்சி அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அது கட்சிக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது சமீபத்தில் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்து அக்கட்சி துணைத்தலைவராக இருக்கும் வி.பி.துரைச்சாமி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் மற்றொரு கூட்டணியும் தேர்தலை சந்திக்கும்.

இனி தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி. இனி திமுக - பாஜகவுக்குத்தான் போட்டியே என்று கூறியிருந்தார். இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் கே.பழனிசாமி ஆகியோர் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி.முனுசாமி, ‘‘தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்ற விபி.துரைசாமி கூறுவதற்கு யார் அவருக்கு அதிகாரம் கொடுத்தது’’ என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ஆனால், அமைச்சர் ஆர்பி.உதயகுமாரோ நேற்று மதுரையில், ‘‘அவரவர் கட்சியை அவர்கள் உயர்வாக பேசுவார்கள். கூட்டணியை கட்சித்தலைமை முடிவெடுக்கும்’’ என்று பொத்தாம் பொதுவாக பாதுகாபாக பேசி நழுவினார். ஆனால், பாஜக மாநில தலைமை நாங்கள் இன்னும் அதிமுக கூட்டணியில் நீடிப்பதாக கூறியுள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பு தொடங்குவதற்கு முன்பே கூட்டணியில் தொகுதிகள் முடிவாகுவதற்கு முன்பே, மதுரையில் பாஜகவினர் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான சுவர் விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

நேற்று முதல் மதுரை கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு தெருவிலும் பாஜகவினர், 2021 தேர்தலில் வாக்களிப்பீர் பாஜகவிற்கு என்று சுவர் விளம்பரம் செய்துள்ளனர்.

இதேபோல்தான், கடந்த மக்களவைத்தேர்தல் நேரத்திலும் பாஜகவினர், மதுரை மக்களவைத்தொகுதியில் சுவர் விளம்பரம் செய்தும், தெருமனைப்பிரச்சாரக் கூட்டங்களும் நடத்தினர்.

ஆனால், மதுரை தொகுதி அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது. அதனால், பாஜகவினர் தேர்தலில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று அதிமுகவினர் அதிருப்தியடைந்தனர்.

தற்போது வரை, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அதிமுகவுக்கும், பாஜகவிற்கும் அவ்வப்போது உரசல் சென்று கொண்டிருக்கும் நிலையில் மதுரையில் பாஜக வரைந்துள்ள சுவர் விளம்பரம் மாவட்ட அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மதுரை புறநகர் மாவட்ட பாஜக செயலாளர் சுசீந்திரனிடம் கேட்டபோது, ‘‘கூட்டணி தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்.

கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து தொகுதிகளிலும் சுவர் விளம்பரம் செய்கிறோம்.

கடைசி நேரத்தில் தனித்து போட்டியிடுவோம் என கட்சித் தலைமை சொல்லவிட்டால் ஓடிப்போய் வேலை செய்ய முடியாது. அதனால், ஒரு தேசிய கட்சி என்ற முறையில் மக்களை சந்திக்க தயாராகி வருகிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x