Published : 13 Aug 2020 08:18 PM
Last Updated : 13 Aug 2020 08:18 PM

அதிமுகவுக்கு ஒரு கிளை மாதிரிதான் திமுகவை வைத்திருக்கிறோம்: அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அதிரடிப் பேட்டி!

ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ் | கோப்புப்படங்கள்

“சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றால் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள்” என்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கொளுத்திப் போட்ட நெருப்பு அணையாமல் புகைந்து கொண்டிருக்கிறது.

இதுபற்றி ஏதாவது கருத்துச் சொல்லி தேவையற்ற விவாதங்களுக்கு வழிவகுக்க வேண்டாம் என்று அதிமுக விஐபிக்களுக்கு அன்புக் கட்டளை போட்டிருக்கிறது அதிமுக தலைமை. இது தொடர்பான விவாதங்களுக்கு ஏற்பாடு செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இப்போதைக்குப் பங்கெடுக்க வேண்டாம் என கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்களுக்கு அணை போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி 'இந்து தமிழ்' இணையத்துக்கு அளித்த பேட்டி:

ஓபிஎஸ் - இபிஎஸ் யார் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்ற அஸ்திரத்தை வைத்து அதிமுகவுக்குள் கலகம் பிறந்திருக்கிறதோ?

நாங்கள் சரியாக இருக்கிறோம். எதிர்க் கட்சிகள்தான் கலகம் பிறக்காதா என்று காத்துக் கொண்டிருக்கின்றன. மூன்று மாதங்களுக்கு முன்பு சேலம் ஆத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நம்முடைய முதல்வர், “எடப்பாடி பழனிசாமி என்ற இந்த ஏழை விவசாயியின் மகன் மாத்திரம் முதல்வர் இல்லை. இங்கே கூடியிருக்கின்ற ஆயிரக்கணக்கான தொண்டர்களும் முதல்வர்தான். இது தொண்டர்களின் இயக்கம். நாளைக்கே இதில் யார் வேண்டுமானாலும் முதல்வராக வரலாம்; அதுதான் அதிமுக” என்று பேசினார்.

இப்படிப் பெருந்தன்மையுடன் பேசக்கூடிய முதல்வரை ஏற்றுக் கொண்டுதான் ஓபிஎஸ் என்கிற ஒப்பற்ற தலைவரும் இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார். எந்த சலசலப்பும் இன்றி கட்சிப் பணிகளும் ஆட்சிப் பணிகளும் ஜெயலலிதாவின் வழியில் செவ்வனே நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை. ஓபிஎஸ் -இபிஎஸ் இரட்டைத் தலைமையின் கீழ்தான் சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் 11 தொகுதிகளை வென்றெடுத்திருக்கிறது அதிமுக. எனவே, எதிர்காலத்திலும் இவர்களின் தலைமையே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

அப்படியானால் அமைச்சர் செல்லூர் ராஜூ இந்த நேரத்தில் எதற்காக இப்படிப் பேசவேண்டும்?

அவர் சொன்னதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றுதானே அவர் சொன்னார். இதிலென்ன தவறு இருக்கிறது? இருப்பினும், அமைச்சர்கள் இதுபோலப் பேசும்போது பொறுப்புடன் பேசவேண்டும் என்பது எனது பணிவான கருத்து. ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க எதிரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, எந்த வகையிலும் அவர்களுக்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது.

“தமிழகத்தில் இனி பாஜக தலைமையில்தான் கூட்டணி” என அந்தக் கட்சியின் புதிய வரவான பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி சொல்லியிருக்கிறாரே?

கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் அப்படிப் பேசியியிருக்கிறார். ஆனால், நேற்று அந்தக் கட்சிக்கு வந்தவருக்கு இந்தக் கருத்தைச் சொல்ல என்ன அதிகாரம் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. வி.பி.துரைசாமி சொன்ன கருத்தைப் பாஜகவினரே ஏற்காதபோது நாங்கள் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?

“திமுகவிலிருந்து சீனியர்கள் வெளியேறுவார்கள், தேர்தலில் திமுக சரிவைச் சந்திக்கும்” என்று மு.க.அழகிரி சொல்லி இருக்கிறாரே?

அழகிரி சொல்வது நிச்சயம் நடக்கும். கருணாநிதி இருக்கும்போதே, “தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்” என்று சொன்னார் அழகிரி; அது அப்படியே நடந்தது. திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக இத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கும் என்றார்; அதுவும் அப்படியே பலித்தது. அரசியலை மிகவும் சரியாகக் கணிக்கத் தெரிந்தவர் அழகிரி. எனவே, திமுக சரிவைச் சந்திக்கும் என இப்போது அவர் சொல்லி இருப்பதும் நடந்தே... தீரும்.

புகழேந்தி

அதிமுகவுக்கு வலிமையான தலைமை இல்லை. அதனால், சசிகலா விடுதலையானதும் அந்தக் கட்சிக்குள் குழப்பம் அதிகரிக்கும் என்று திமுக எம்.பி.யான டிகேஎஸ் இளங்கோவன் சொல்கிறாரே?

குழப்பம் ஏற்பட்டிருப்பது திமுகவில்தான். அதனால் தான் வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் போன்றவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக அங்கிருந்து வெளியேறுவதைப் பார்க்க முடிகிறது. திமுகவில் இப்போது மூத்த தலைவர்களுக்கு வேலை இல்லை என்று எல்லோரும் நொந்து போயிருக்கிறார்கள். அதிமுகவிலிருந்து வெளியேறி, வெளியேற்றப்பட்டு திமுகவுக்குச் சென்ற செந்தில் பாலாஜி, சேகர் பாபு, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ரகுபதி, ஈரோடு முத்துசாமி, ரகுபதி, ராஜ கண்ணப்பன், ஜெகத்ரட்சகன், அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள்தான் இப்போது திமுகவை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் ஆளுமையால், உண்மையாகக் கொடி பிடித்துக் கட்சி வளர்த்த திமுக தொண்டர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுக் கிடக்கிறார்கள். ஆக, அதிமுகவுக்கு ஒரு கிளை மாதிரித்தான் திமுகவை நாங்கள் வைத்திருக்கிறோம்.

எங்களிடம் பயிற்சி பெற்று இப்போது திமுகவை வழிநடத்திக் கொண்டிருக்கும் இவர்கள் அத்தனை பேரும் திமுகவுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பிருக்கிறது. ஆகவே, திமுகவின் அடித்தளம்தான் ஆடிக் கொண்டிருக்கிறது. இதை உணர்ந்து உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளப்பாருங்கள் என்பதுதான் இளங்கோவனுக்கு நான் சொல்லும் அட்வைஸ்.

இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x