Published : 13 Aug 2020 07:16 PM
Last Updated : 13 Aug 2020 07:16 PM

தவித்து தத்தளித்து நிற்கும் மாணவர்கள்; பல்கலைக்கழக கடைசி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் 

கலை, அறிவியல் மற்றும் பொறியியல் இறுதியாண்டு கடைசி செமஸ்டர் மாணவர்களின் தேர்வினை ரத்து செய்து, ஏற்கெனவே அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டம் வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

''மத்திய பாஜக அரசு 'ஈகோ' பார்க்காமல் மாநிலங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாநில அரசுகளே முடிவு செய்து இறுதியாண்டுத் தேர்வினை ரத்து செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தி, மாணவர்களின் மனக்குமுறலையும் பெற்றோருக்கு இருக்கும் பேரழுத்தத்தையும் போக்கிட வேண்டும்.

“மாநில அரசுகளுடன் மத்திய பாஜக அரசு நடத்தும் அதிகார யுத்தத்தில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் இறுதியாண்டில் உள்ள மாணவர்கள் தாங்கமுடியாத இன்னலுக்கும், துயரத்திற்கும் உள்ளாகி அவதிப்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

கரோனா பேரிடரால் இறுதியாண்டின் கடைசி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து, ஏற்கெனவே பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து அவர்களுக்கு முதலில் பட்டப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழ்களை வழங்கியிருக்க வேண்டிய நேரத்தில் - மத்திய- மாநில அரசுகளின் அலட்சியத்தால் இன்றுவரை தங்களுக்கு ‘டிகிரி கிடைக்குமா? எப்போது கிடைக்கும்?' என்ற கடுமையான மன உளைச்சலுக்கு மாணவர்கள் உள்ளாகியிருக்கிறார்கள்.

இறுதியாண்டில் “கேம்பஸ் இன்டர்வியூவில்” தேர்வு பெற்றவர்கள், அவர்களுக்குக் கிடைத்த வேலைகளில் சேர முடியவில்லை. வேலை கொடுத்த நிறுவனங்கள் பல அதை ரத்தும் செய்துவிட்டன. பல நிறுவனங்கள் தேர்வு பெற்றவர்களை வேலையில் சேர்க்காமல் - ‘டிகிரி சர்டிபிகேட் வாங்கிக்கொண்டு வாருங்கள்’ என்று அவகாசம் கொடுத்து விட்டுக் காத்திருக்கின்றன. அதனால் நடைபெற்ற “கேம்பஸ் இன்டர்வியூ” அனைத்தும் அர்த்தமற்றதாகும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

டிகிரி முடித்து உயர் கல்வி கற்க நினைப்பவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை; வெளிநாடுகளில் உயர் கல்வி பயில விரும்புவோர் நுழைவுத் தேர்வுகளையோ அல்லது விண்ணப்பித்த பிறகு உயர் கல்வியிலோ சேர முடியவில்லை, டிகிரி தகுதி அடிப்படையில் எழுதும் வாய்ப்புள்ள போட்டித் தேர்வுகளையும் எழுத இயலவில்லை.

எழுதிய தேர்வுகளுக்கும் டிகிரி சர்டிபிகேட்டை ஒப்படைக்க முடியவில்லை. மூன்று ஆண்டுகள் கலை, அறிவியல் படிப்புகள் மற்றும் நான்கு வருட பொறியியல் படிப்புகளின் இறுதி செமஸ்டரில் உள்ள மாணவர்கள் அனைவரும் வேலை, உயர்கல்வி, வெளிநாட்டுக் கல்வி ஆகிய அனைத்து வாய்ப்புகளுக்கும் முயற்சி செய்ய முடியாமல் தவித்து - தத்தளித்து நிற்கிறார்கள்.

ஆனால், “இறுதி செமஸ்டரில் உள்ள மாணவர்களின் எதிர்காலம் குறித்து முதலில் முடிவு எடுத்திருக்க வேண்டிய” மத்திய பாஜக அரசும், இங்குள்ள அதிமுக அரசும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து அக்கறையின்றி, வேடிக்கை பார்த்துக் காத்திருக்கிறது.

பல்கலைக்கழக மானியக்குழுவோ “தேர்வுகளை ரத்து செய்ய மாநிலங்களுக்கு உரிமை இல்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருக்கிறது. இறுதியாண்டு மாணவர்களின் வாழ்க்கை பற்றி துளியும் கவலைப்படாமலும் - அவர்களுக்கும் - அவர்களின் பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ள மன அழுத்தங்களைக் கண்டுகொள்ளாமலும் மத்திய - மாநில அரசுகள் இருந்து வருவது கண்டனத்திற்குரியது.

கரோனா பேரிடர் காலம் என்பது, யார் பெரியவர் என்று “அதிகாரப் போட்டி” நடத்திக் கொள்வதற்கான நேரமல்ல; கனவுகளுடன் காத்திருக்கும் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்திற்குக் காலதாமதமின்றி வழி காட்டிட வேண்டிய நேரம் என்பதை, “கல்விக் கொள்கையில் புரட்சி செய்யப் போகிறோம்” என்று “விளம்பரப்படுத்தும்” மத்திய பாஜக அரசு உணராமல் இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

பேச்சு ஒன்றும் - செயல் வேறாகவும் இருப்பது பொறுப்புள்ள மத்திய அரசுக்கு அழகல்ல. ஆகவே இறுதியாண்டு கடைசி செமஸ்டர் மாணவர்களின் தேர்வினை ரத்து செய்து, ஏற்கெனவே அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் டிகிரியை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய பாஜக அரசும் இதில் “ஈகோ” பார்க்காமல் - “தங்களுக்கே அதிகாரம்” என்று விதண்டாவாதம் செய்யாமல் - அந்தந்த மாநிலங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாநில அரசுகளே முடிவு செய்து இறுதியாண்டுத் தேர்வினை ரத்து செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தி - மாணவர்களின் மனக்குமுறலை - பெற்றோருக்கு இருக்கும் பேரழுத்தத்தைப் போக்கிட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x