Published : 13 Aug 2020 06:18 PM
Last Updated : 13 Aug 2020 06:18 PM
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் முதல்வர் கொடியேற்றும் நிகழ்ச்சி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“சுதந்திர தின விழா ஆகஸ்டு 15-ம் தேதி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு சுதந்திர தின விழா நடைபெறும் அன்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சிகள் முடியும் வரை கீழ்க்கண்ட சாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது.
உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்குப் பகுதி வரை அமையப் பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட உள்ளது.
* காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை வந்தடையலாம்.
* பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road), ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.
* அண்ணா சாலையில் இருந்து கொடிமரச் சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையைச் சென்றடையலாம்.
* முத்துசாமி சாலையில் இருந்து கொடிமரச் சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையைச் சென்றடையலாம்.
* சிவப்பு மற்றும் ஊதா வண்ண வாகன அடையாள அட்டை வைத்திருப்போர் காலை 8.45 மணிவரை ராஜாஜி சாலை வழியாகச் சென்று தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கிக்கொண்டு வாகனத்தைக் கோட்டை வளாகத்தில் நிறுத்த வேண்டும். இதே அடையாள அட்டை வைத்திருப்போர் காலை 08.45 மணிக்குப் பின் வந்தால் கொடிமரச் சாலை, ஜார்ஜ் கேட் வழியாக கோட்டையை அடைய வேண்டும்.
* நீல மற்றும் இளஞ்சிவப்பு வண்ண வாகன அட்டை வைத்திருப்போர் கொடிமரச் சாலை, ஜார்ஜ்கேட் வழியாகவோ அல்லது முத்துசாமி பாலம், வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road), பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பதை வழியாகச் சென்று தலைமைச் செயலக வெளி வாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களைத் தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்புறம் உள்ள PWD வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
* அனுமதி அட்டை இல்லாமல் வாகனங்களில் வருவோர் போர் நினைவுச்சின்னம் அருகே இறங்கிக்கொண்டு, வாகனங்களைத் தீவுத்திடலில் நிறுத்த வேண்டும்.
மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.
இவ்வாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment