Published : 13 Aug 2020 06:39 PM
Last Updated : 13 Aug 2020 06:39 PM
வார்த்தைகளால் விவரிக்க முடியாததை ஒற்றைப் புகைப்படம் சொல்லிவிடும். அதிலும் நெருக்கடியான காலகட்டத்தில் துணிச்சலாக எடுக்கப்படும் புகைப்படங்கள் காலம் கடந்து நிற்கும் பெட்டகம் ஆகிவிடுகிறது.
அந்த வகையில் கரோனா காலத்தின் தொடக்கம் முதலே துணிச்சலுடன் களத்தில் நின்று புகைப்படங்களை எடுத்துக் கவனிக்க வைக்கிறார் ஜாக்சன் ஹெர்பி. கரோனாவுக்குப் பலியானவர்கள் எரியூட்டப்படும் காட்சி தொடங்கி, கரோனா வார்டுக்குள் நடக்கும் நிகழ்வுகளை கேமராவில் பதிவு செய்தது வரை இவரது கரோனா காலப் பதிவுகள் அனைவரையும் பேச வைக்கின்றன.
நாகர்கோவில் மாநகராட்சி புகைப்படக் கலைஞரான ஜாக்சன் ஹெர்பி தனது துணிச்சலான செயல்பாடுகளால் கவனிக்கப்படுவர். குமரி மாவட்டத்தை ஒக்கி புயல் தாக்கியபோது இவர் எடுத்த புகைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி குமரி வந்திருந்தபோது பாதிப்பின் தீவிரத்தை விளக்க வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களில் இவர் எடுத்த படங்களும் அதிக அளவில் இடம்பெற்றிருந்தன.
கரோனாவின் தொடக்கம் முதலே குமரியின் அனைத்து நிகழ்வுகளையும் தனது கேமரா கண்களுக்குள் பதிவு செய்துள்ளார் ஜாக்சன். அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கி, தூய்மைப் பணியாளர்களின் சேவை வரை அத்தனையும் இவரது கேமராவுக்குள் சேகரமாகியுள்ளது. அதன் உச்சமாக இப்போது கரோனா சிகிச்சை வார்டுக்குள்ளும் நுழைந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஜாக்சன் ஹெர்பி, “குமரியில் கரோனா தொற்று கண்டறியப்படாத காலத்திலேயே தமிழகத்திலேயே முதன்முறையாக கரோனாவால் யாரேனும் இறந்தால் எப்படித் தகனம் செய்யவேண்டும் என ஒத்திகை நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடந்தது. அதை ஏற்கெனவே படம் எடுத்திருந்தேன். அதேபோல் சிகிச்சை பலனின்றி இறக்கும் கரோனா நோயாளிகளைப் பார்க்க உறவினர்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டிருந்த நேரத்தில் மாநகராட்சியின் மின் தகன மேடையில் எரியூட்டப்படும் நிகழ்வுகளைப் புகைப்படம் எடுத்தேன்.
முழு உடலையும் மறைக்கும் கவச உடை சகிதம்தான் போய் அந்தப் புகைப்படங்களை எடுத்தேன். இப்போது கரோனா சிகிச்சை மையத்துக்கும் அப்படித்தான் போனேன். கரோனாவின் தொடக்கத்தில் இருந்தே அதிகாரிகளோடு சேர்ந்தே பயணிக்கிறேன். ஆரம்பத்தில் வெளியூர், வெளிநாடு சென்று திரும்பியவர்களுக்குத்தான் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. அது எனக்கு அச்சத்தைத் தரவில்லை. ஒருகட்டத்தில், திடீரென வடசேரி காய்கனிச் சந்தையில் ஆறு பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டது.
அப்போதுதான் முதன்முறையாகக் கொஞ்சம் பயம் வந்தது. ஆனால், இது பயப்பட வேண்டிய நேரம் அல்ல; மற்றவர்களின் பயத்தைப் போக்கவேண்டிய தருணம். ஒரு புகைப்படக் கலைஞனுக்கு எப்போதும் வாய்ப்புகள் அமைந்துவிடாது. ஆனால், இந்தக் கரோனா வடிவில் எனக்கு அந்த வாய்ப்பு அமைந்திருப்பதாக நினைத்தேன். அதன் வெளிப்பாடாகத்தான் துணிச்சலாக மின் மயானத்துக்குச் சென்று படம் எடுத்தேன். அதன் அடுத்த முயற்சிதான் கரோனா சிகிச்சை மையத்துக்குச் சென்றது.
உள்ளே செல்லும்போதும், வெளியே வந்த உடனும் என் முழு உடலிலும் கிருமிநாசினி அடித்தார்கள். நான் கொண்டுபோன கேமராவிலும் லென்ஸ் இல்லாத மற்ற பகுதிகள் முழுவதும் சானிடைசர் போட்டிருந்தேன். முழு உடலையும் மறைத்து கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தன. நான் சென்ற சிகிச்சை மையத்தில் மொத்தம் 180 நோயாளிகள் இருந்தார்கள். நான் உள்ளே சென்றபோது எனக்குக் கரோனா சிகிச்சை, சமூக நீதியின் தொட்டிலாகத் தெரிந்தது.
நாகர்கோவிலில் பெரும்வசதி படைத்த கோடீஸ்வர வீட்டுப் பெண் ஒருவருக்குப் பக்கத்துப் படுக்கையில் ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தை சிகிச்சை பெறுகிறது. நான் போன நேரத்தில் முழு உடலையும் மறைத்திருக்கும் கிட் அணிந்து கொண்டு ஒருவர் நோயாளிகளுக்கு வாழைப்பழம் கொடுத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் கபசுரக் குடிநீர் வந்தது. மதியம் இரு முட்டைகளோடு சாப்பாடு வந்தது.
ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் கண்கள் மிரட்சியுடன் இருந்தன. அவர் என்னைக் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண்ணுக்குக் கரோனா கடுமையான அச்சத்தை உருவாக்கியிருப்பதை என்னால் உணர முடிந்தது. அவருக்குப் பக்கத்துப் படுக்கையில் ஒரு குழந்தை கரோனாவைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் மகிழ்ச்சியாக பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தது. சிலருக்கு யோகா பயிற்சிகள் நடந்து கொண்டிருந்தன. குழந்தையின் மனநிலையில் கரோனா சிகிச்சையை எதிர்கொள்பவர்கள் சீக்கிரம் குணமடைகிறார்கள். மன அழுத்தமாக அதை மாற்றிக் கொள்பவர்கள் சிக்கலை எதிர்கொள்கிறார்கள் என நினைக்கிறேன்.
சொந்த வேலையாக வெளியில் சுற்றுபவர்களுக்கே கரோனா வந்துவிடுகிறது. ஆனால், நான் தொடக்கத்தில் இருந்து சுற்றினாலும் சில நுட்பங்களைக் கடைப்பிடிப்பதால்தான் நோய்த் தொற்றில் இருந்து விலகியிருக்கிறேன். எனது கேமரா பேக்கில் எப்போதும் சானிடைசர் இருக்கும். ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒருமுறை கைகளைக் கழுவிக் கொண்டே இருப்பேன். என்னதான் சிரமம் என்றாலும் வெளியில் பொது இடத்தில் டீ, காபி குடிக்கமாட்டேன். அது எனது பாதுகாப்பை முன்னிறுத்தி அல்ல. அதிகமாகச் சுற்றும் என்னிடம் இருந்து மற்றவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி.
நான் கரோனா களத்தில் பணி செய்வதை என் மனைவி அபிலஷாவும் ஊக்குவிக்கிறார். மூத்த மகள் ஷெலின் ஹெர்பிக்கு ஒன்றரை வயது. போன மாதம் இரண்டாவது குழந்தை பிறந்தது. ஜோலின் ஹெர்பி என்று பெயர் வைத்துள்ளோம். வீட்டில் இரண்டு குழந்தைகள் இருப்பதால் வெளியே போய்விட்டு வந்ததுமே வீட்டுக்கு முன்னால் இருக்கும் தொட்டியில் குளித்துவிட்டுத்தான் வீட்டுக்குள்ளேயே போவேன். மொபைல் போனையும் அடிக்கடி சானிடைசர் போட்டுத் துடைப்பேன்.
கரோனா களத்தில் நான் அச்சமின்றிப் பணி செய்வதை அரசு அதிகாரிகளும், முக்கிய மனிதர்களும் பாராட்டுகிறார்கள். ஆனால், தன் கஷ்டமான சூழலுக்கு மத்தியில் வீட்டின் முன்பகுதியில் இருந்த இடத்தை விற்று, எனக்குக் கேமரா வாங்கிக் கொடுத்த என்னோட அப்பா இதையெல்லாம் பார்த்துப் பெருமைப்பட உயிருடன் இல்லை. இந்த வருத்தம் மட்டும் எனக்குள்ளே இருக்கிறது'' என்றார் ஜாக்சன் ஹெர்பி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT