Published : 13 Aug 2020 05:57 PM
Last Updated : 13 Aug 2020 05:57 PM
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியை மீண்டும் பண்ணைக்கே அனுப்பவேண்டும் என பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில், இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், புதுச்சேரி அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயிலில் உள்ள லட்சுமி என்ற பெண் யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. யானை கொடுமைப்படுத்தப்படுவதாக பீட்டா அமைப்பு அளித்த புகாரின் பேரில் புதுவை குருமாம்பேட்டையில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய வளாகப் பண்ணையில் யானை சேர்க்கப்பட்டது.
அங்கு யானை சரியாகப் பராமரிக்கப்படவில்லை, பொதுவெளியில் இருந்த யானை தற்போது தனியாக கட்டிப் போடப்பட்டுள்ளது, அதற்கு சரியான கவனிப்பு இல்லை, மழைக்கு ஒதுங்க கொட்டகைகூட இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
யானையை மீண்டும் கோயிலுக்கு அழைத்து வர வேண்டும் என்று பக்தர்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தன. இதைப் பரிசீலித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியைக் கோயிலுக்குக் கொண்டு வரவும், உரிய சிகிச்சை அளித்துப் பராமரிக்கவும் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 18-ம் தேதி, 40 நாட்களுக்குப் பிறகு, யானை லட்சுமி ஊர்வலமாக மேள தாளத்துடன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது.
முதல்வர் நாராயணசாமி, தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத், புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அன்பழகன், இந்து முன்னணி, பாஜகவினர், கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் ஆகியோர் யானை லட்சுமிக்குப் பழங்கள் கொடுத்து வரவேற்பு அளித்தனர். பின்னர் கோயிலில் யானைக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.
மீண்டும் கோயிலுக்குக் கொண்டு வந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியான மணிலா வலியாட்டே பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் யானையை மீண்டும் பண்ணைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் தற்போது எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தனர். அதேசமயம் யானை லட்சுமிக்குத் தேவையான ஊட்டச்சத்துடைய உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
வழக்கு குறித்து புதுவை அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT