Published : 13 Aug 2020 05:51 PM
Last Updated : 13 Aug 2020 05:51 PM
கரோனா தொற்றாளர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவது பலன் தராது. ஏனெனில் அது அனைவரையும் பாதிக்கும். அவர்களைத் தனிமைப்படுத்த தனி இடம் தேவை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் இன்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் இறப்போர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் இதுவரை 6,680 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,504 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 1,246 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 102 பேர் இறந்துள்ளனர்.
புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதியை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காமல் வீட்டில் தனிமைப்படுத்துவதால் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இச்சூழலில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் இன்று (ஆக.13) புதுச்சேரியில் ஆய்வு மேற்கொண்டார். கரோனா நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்த பின்பு முதல்வர் நாராயணசாமியையும் அதிகாரிகளையும் சந்தித்து சட்டப்பேரவை வளாகத்திலுள்ள கமிட்டி அறையில் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, கரோனா தடுப்புப் பணிகளையும் 'கோவிட் வார் ரூம்' ஆகியவற்றையும் நேரில் சென்று பார்த்தார்.
கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் கூறியதாவது:
"கரோனா தொற்றாளருக்கு யார் மூலம் பரவியது என்பதை அறிதல், பரிசோதனை, அதைத் தடுக்கும் சிகிச்சை மற்றும் திட்டம் ஆகிய மூன்று விஷயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். எந்த வகையிலும் இதைக் குறைக்க வேண்டாம். இது நீண்டகாலப் போர் என்பதால் இம்மூன்றிலும் கவனம் அவசியம். இதில் ஏதேனும் ஒன்றைக் குறைத்தாலோ, தளர்வு செய்தாலோ விளைவு மிகவும் கடினமாக அமையும்.
அதேபோல், சிறிய வீடுகளில் தொற்றாளர்களைத் தனிமைப்படுத்துவதற்குப் பலனில்லை. ஏனெனில், அது அனைவரையும் பாதிக்கிறது. தொற்றாளர்களைத் தனிமைப்படுத்தி வைக்க ஓரிடம் தேவை.
கரோனா செயல்பாடுகள் தொடர்பாக தமிழகத்தின் நடவடிக்கைகளை மாதம் ஒருமுறை தொடர்பு கொண்டு அறிவது போல், புதுச்சேரியிலும் தொடர் சந்திப்பு நிகழும்.
கரோனா தொற்று எங்கிருந்து வந்தது என்பதை அறிய பள்ளிப் படிப்பை தகுதியாகக் கொண்ட இளையோருக்குப் பயிற்சி தந்து ஒப்பந்தப் பணியில் நியமிக்கலாம்".
இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் தெரிவித்ததாக கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT