Published : 13 Aug 2020 05:15 PM
Last Updated : 13 Aug 2020 05:15 PM
நீலகிரி மாவட்டப் பெண் ஆய்வாளர் எ.பொன்னம்மாளுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்புப் புலனாய்வுக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வி.சசிமோகன் அவரைப் பாராட்டினார்.
நீலகிரி மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார், எ.பொன்னம்மாள். இவர், குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில், குறுகிய காலத்தில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தார்.
அந்த வழக்கில் சிறப்பான முறையில் புலன் விசாரணை செய்து குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்த புலன் விசாரணை திறமையைப் பாராட்டி அவருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்புப் புலனாய்வுக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்துக்குப் பின்னா், சில நாள்களில் டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மண்டலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவருக்கு மட்டும் இப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வாளர் எ.பொன்னம்மாளின் திறமையைப் பாராட்டும் வகையில் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வி.சசிமோகன், அவரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வி.சசிமோகன் கூறும் போது, "பொன்னம்மாள் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தபோது, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைப் பிரிவில் 12.09.2017 அன்று வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டார்.
வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயகுமார் என்பவரைக் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். இந்த வழக்கு 2018-ம் ஆண்டு புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சிறப்பு வழக்காக எடுக்கப்பட்டு ஜெயகுமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் நீதிமன்ற விசாரணை குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்த வழக்கில் சிறப்பான முறையில் புலன் விசாரணை செய்து குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்த புலன் விசாரணை திறமையைப் பாராட்டி அவருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்புப் புலனாய்வுக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆய்வாளரை நேரில் அழைத்துப் பாராட்டினேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT