Published : 13 Aug 2020 04:41 PM
Last Updated : 13 Aug 2020 04:41 PM
திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றும் காவலர்களுக்கு 'வாரத்தின் சிறந்த காவலர்' என்ற பாராட்டுப் பத்திரத்துடன் ரூ.500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என எஸ்.பி. விஜயகுமார் அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்துடன் இருந்த திருப்பத்தூர் கடந்த ஆண்டு புதிய மாவட்டமாக உருவானது. புதிய மாவட்டமாக உருவான பிறகு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் நியமிக்கப்பட்டார். திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக விஜயகுமார் நியமிக்கப்பட்ட பிறகு சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து, குற்றச்செயல், வழிப்பறி, திருட்டு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு எஸ்.பி. விஜயகுமார் உத்தரவிட்டார்.
இது மட்டுமின்றி பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது யோசிக்காமல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து, வாகனச் சோதனையின்போது பொதுமக்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வது போன்ற ஒழுங்கீனமான செயல்களை யாரும் செய்யக்கூடாது என்ற உத்தரவையும் எஸ்.பி. விஜயகுமார் பிறப்பித்தார்.
இதுபோன்ற உத்தரவுகள் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறையில் பல புதுமைகளை எஸ்.பி. விஜயகுமார் செயல்படுத்தி வருவதை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் உட்கோட்ட அதிகாரி, காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் என அனைவரின் பணியிடங்கள், அவர்களின் செல்போன் எண்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தினமும் வெளியிடப்பட்டு வருகிறது.
இதனால், திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காவல்துறையில் பணியாற்றி வரும் அனைத்துக் காவலர்களின் பணியினை ஊக்குவிக்கும் வகையில் 'வாரத்தின் சிறந்த காவலர்' என்ற பாராட்டுப் பத்திரமும், ரூ.500 ஊக்கத்தொகையும் காவல்துறையினருக்கு வழங்கப்படும் என எஸ்.பி. விஜயகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் முக்கிய வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியைக் கைது செய்ய உறுதுணையாகச் செயல்படும் காவலர், காவல் நிலையத்தில் பதிவேடுகளைச் சிறப்பாகப் பராமரித்தல், பொதுமக்களிடம் நற்பெயரைப் பெறும் வகையில் பணி செய்தல், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தல், வாகனச் சோதனையின்போது சட்ட விரோதச் செயல்களைக் கண்டுபிடித்தல் போன்ற செயல்களில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றும் காவலர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு, 'வாரத்தின் சிறந்த காவலர்' என்ற பாராட்டுப் பத்திரமும் ரூ.500 ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என எஸ்.பி. விஜயகுமார் அறிவித்துள்ளார்.
மேலும், காவல்துறை அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள், காவலர்களின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் 94862-42428 என்ற தொலைபேசி எண்ணில் குறுஞ்செய்தியாக அனுப்பலாம் எனவும், பொதுமக்களிடம் அவப்பெயரைச் சம்பாதிக்கும் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எஸ்.பி.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துக் காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, "காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் பொதுமக்களின் நண்பர்களாகச் செயல்பட வேண்டும். பொதுமக்களைக் காவலர்கள் எப்படிக் கண்காணிக்கிறார்களோ அதேபோல, பொதுமக்களும் காவல்துறையில் பணியாற்றும் அனைவரையும் கண்காணிக்கின்றனர். தற்போதைய காலகட்டத்தில் எதையும் மறைக்க முடியாது.
காவல் நிலையங்களைத் தேடி வரும் பொதுமக்களுக்கு விரைவாகத் தீர்வு தேவைப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல காவல் துறையினர் விரைவாகச் செயல்பட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், காவலர்களையும் ஊக்கப்படுத்தினால், பல இன்னல்களுக்கு இடையே பணியாற்றும் காவலர்களுக்கு புது உத்வேகம் பிறக்கும்.
காவல்துறைக்கு புதிய ரத்தத்தைப் பாய்ச்சவே, 'வாரத்தின் சிறந்த காவலர்' என்ற பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி. கைகளால் பரிசு பெற விரும்பும் காவலர்கள் இனி சிறப்பாகப் பணியாற்றுவார்கள் என நம்புகிறோம்" என்றனர்.
திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமாரின் ஒவ்வொரு முயற்சிக்கும் பொதுமக்கள் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT