Published : 13 Aug 2020 04:06 PM
Last Updated : 13 Aug 2020 04:06 PM

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்பதை ரத்து செய்க: சு.திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தல்

சு.திருநாவுக்கரசர் எம்.பி: கோப்புப்படம்

சென்னை

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்பதை ரத்து செய்ய வேண்டும் என, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, சு.திருநாவுக்கரசர் எம்.பி. இன்று (ஆக.13) வெளியிட்ட அறிக்கை:

"மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மூலம் அனுமதி பெற வேண்டும் என்கிற இ-பாஸ் செயல்முறை இந்தியா முழுவதும் மத்திய அரசால் நீக்கப்பட்டுவிட்டது.

தமிழ்நாட்டில் தொடரும் இந்தத் திட்டத்தால் பொதுமக்களுக்குக் காலதாமதம், இடையூறுகள், வீண் மன அழுத்தம் போன்ற தேவையில்லாத சிரமங்கள் ஏற்படுகின்றன. திருமணம், இறப்பு மருத்துவம் உள்ளிட்ட முக்கியத் தேவைகளுக்காகச் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஹோட்டல்கள், சுற்றுலா போன்றவை செயல்படாத நிலையில் அநாவசியமாக யாரும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லப் போவதில்லை. அதுவும் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் இன்னமும் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படாமல் பரவிவரும் கரோனா தொற்றால் மக்கள் பீதியிலும் பயத்திலும் உள்ளனர். தேவையில்லாத பயணங்களை அவசியமின்றி யாரும் குறிப்பாக குடும்பங்களோடு செய்யப்போவதில்லை.

திமுகவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இதுகுறித்து தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவற்றைக் கருத்தில் எடுத்துக்கொண்டு தமிழக அரசு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லுவதற்கான தடையை ரத்து செய்வதற்கு தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x