Published : 13 Aug 2020 03:08 PM
Last Updated : 13 Aug 2020 03:08 PM
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பழங்கால நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியரும், திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முனைவர் பட்ட தொல்லியல் ஆய்வு மாணவருமான சிவகளையைச் சேர்ந்த ஆசிரியர் மாணிக்கம், இந்திய தொல்லியல்துறை ஆய்வாளர்கள் யத்தீஸ்குமார், பிரசன்னா மற்றும் கல்வெட்டாய்வாளர் வீரமணிகண்டன் ஆகியோர் வழிகாட்டுதல்கள் படி பல்வேறு தொல்லியல் ஆதாரங்களைக் கண்டுபிடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஸ்ரீவைகுண்டம் அணை அருகே குருசுகோயில் வழியாக செல்லும் வாய்க்கால் படித்துறையில் 16 - 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்றை அவர் கண்டறிந்துள்ளார்.
இந்தக் கல்லானது 89 செ.மீ நீளமும், 50 செ.மீ உயரமும், 31 செ.மீ அகலமும் கொண்ட காணப்படுகிறது.
ஒரே கல்லில் செய்யப்பட்ட இந்நடுகல்லில் ஒரு ஆண் மற்றும் இரு பெண்கள் ஓர் காலை மடக்கி, மற்றொரு காலை தொங்கவிட்டப்படி அமர்ந்த நிலையில் இருக்கும் உருவங்கள் காணப்படுகின்றன. இதில் பெண் சிற்பங்களின் உயரம் 31 செ.மீ.யும், ஆண் சிற்பத்தின் உயரம் 38 செ.மீ.யும் கொண்டு காணப்படுகின்றன.
ஆணின் தலையில் கீரிடமும், ஆடை, ஆபரணங்களும், அதே போன்று பெண்களின் உருவங்களில் கொண்டை, ஆடை, ஆபரணங்கள் காட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த நடுகல்லில் கோயில் போல் மேல் மாடம் அமைக்கப்பட்டு மழைநீர் உருவங்கள் மீது பாடாதவாறு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர் மாணிக்கம் கூறும்போது, பண்டைய காலத்தில் இறந்தவர்களின் நினைவாக இத்தகைய நடுகற்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு அமைக்கப்பட்ட ஒரு நடுகல் தான் இது.
நீண்ட காலமாக இந்த நடுகல் இப்பகுதியில் தான் இருந்துள்ளது. ஆனால், இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. அண்மையில் இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து நடுகல் வெளியே தெரிந்துள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இதுபோன்ற நடுகல்கள் அதிகமாக காணப்படுகின்றன. அதுபோல விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை போன்ற மாவட்டங்களிலும் பரவலாக ஆங்காங்கே நடுகல்கள் காணப்படுகின்றன.
பொதுவாக இவ்வகையான நடுகற்கள் மாலையம்மன், தீப்பாச்சியம்மன், தீப்பொறிஞ்சம்மன், மங்கம்மாள், உலகம்மன், ஆனந்தாயி அம்மன், அழகம்மை, புலிகுத்தியம்மன், ரெங்க மன்னர் தீப்பாய்ச்சியம்மன் எனப் பல பெயர்களில் உள்ளூர் மக்கள்களால் அழைக்கப்படுகின்றன என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT