Published : 13 Aug 2020 01:35 PM
Last Updated : 13 Aug 2020 01:35 PM

உடல் உறுப்பு தான நாள்: இறந்தபின்பும் உடலாய், உணர்வாய் மீண்டும் உலகோடு ஒன்றிணைவோம்; ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

உடல் தானம் செய்வதன் மூலம், இறந்தபின்பும் உடலாய், உணர்வாய் மீண்டும் உலகோடு ஒன்றிணைவோம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இறந்தபின்னர் உடல் உறுப்புகளைத் தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்கு ஊக்கமளிப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஆக.13 ஆம் தேதி உடல் உறுப்பு தான நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 1,382 கொடையாளர்களிடம் இருந்து 8 ஆயிரத்து 163 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன என்றும், உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 5-வது முறையாக தமிழகம் முதலிடம் வகித்து, மத்திய அரசின் விருதுகளைப் பெற்றுள்ளது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.13) தன் முகநூல் பக்கத்தில், "இன்று உடலுறுப்பு தான நாள்.

மறைந்த பிறகும் வாழ்தல் என்பது புகழால், மக்கள் சேவையால், பொதுநலத் தொண்டால் மட்டுமல்ல, உடல் உறுப்பு கொடை மூலமாகவும் சாத்தியம். கொடையில் மிக உயர்ந்தது உடலுறுப்பு வழங்குதல். அத்தகைய உடலுறுப்பு தானம் செய்வதன் மூலமாக அனைவரும் பெரும் கடமை ஆற்றலாம் என்ற ஆலோசனையை அனைவருக்கும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இதுவரை உடலுறுப்பு கொடை அளித்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இனி அளிக்க இருக்கும் அனைவருக்கும் நன்றி!

இருக்கும் வரை உயிராய், உறவாய் ஒன்றிணைவோம்! உடல் தானம் செய்வதன் மூலம், இறந்த பின்பும் உடலாய், உணர்வாய் மீண்டும் உலகோடு ஒன்றிணைவோம்...!" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x