Published : 13 Aug 2020 12:54 PM
Last Updated : 13 Aug 2020 12:54 PM

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வுகள்: தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலேயே அமைக்க வேண்டும்; மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு டி.ஆர்.பாலு கடிதம்

டி.ஆர்.பாலு: கோப்புப்படம்

சென்னை

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலேயே அமைத்துத் தர வேண்டும் என, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலுக்கிணங்க, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு இன்று (ஆக.13) மின்னஞ்சல் மூலம் எழுதிய கடிதத்தில், தேசிய தேர்வுகள் நிறுவனம், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலேயே அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்: கோப்புப்படம்

இது தொடர்பாக, டி.ஆர்.பாலு இன்று எழுதிய கடிதம்:

"மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தேர்வுகள் நிறுவனம், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வுகள் 2020-ஐ வருகின்ற ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்குத் தேர்வு மையங்கள் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று வரையில் தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகள் போன்ற விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை.

தென்மேற்குப் பருவக்காற்றின் பெருமழையால், கேரள மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாக உள்ள நிலையிலும், தமிழகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள், தேர்வுகளை எதிர்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது.

மேலும், தமிழகத்திலேயே ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்வதற்கு இணைய வழி அனுமதிச் சீட்டு பெறுவதில், மிகப் பெரும் சிரமங்களை அனைவரும் எதிர்கொண்டு வரும் நிலையில், மருத்துவ மாணவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.

எனவே வெளி மாநிலத்தின் தேர்வு மையங்களைத் தவிர்த்துவிட்டு, தமிழக மாணவர்கள், தமிழகத்திலேயே தேர்வு எழுதும் வகையிலும், நுழைவுச்சீட்டுகள் ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு முன்னதாகவே கிடைக்கவும், தேசிய தேர்வுகள் நிறுவனத்திற்கு ஆணையிட்டு, ஆவன செய்ய வேண்டும்".

இவ்வாறு டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x