Published : 13 Aug 2020 11:49 AM
Last Updated : 13 Aug 2020 11:49 AM

சுயசார்புப் பாதையில் பயணிக்க வைத்த கரோனா!- ஓர் ஆட்டோ ஓட்டுநரின் அனுபவப் பகிர்வு

பள்ளிக்கூட சவாரியையே பிரதானமாகக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் கரோனா காலம் கடும் நிதி நெருக்கடியைத் தந்திருக்கிறது. ஆனால், அதற்காகத் துவண்டு விடாமல் அதையே தனக்குச் சாதகமாக்கி ஆடு, கோழி, வாத்து, முயல், மீன் வளர்ப்பு, மாடித்தோட்டம் எனத் தன்னை சுயசார்புப் பாதைக்குத் திருப்பிக் கொண்டு பயணிக்கிறார் வினு.

நாகர்கோவில் அருகே பறக்கை கிராமத்தைச் சேர்ந்த வினு ஆட்டோ ஓட்டுநர். காலை, மாலையில் பள்ளிக்கூட சவாரிகளும், மாலையில் டியூஷன் பயணம் என கல்விக் கூடங்களைச் சார்ந்தே இவரது பிழைப்பு இருந்தது. தற்போது கரோனாவால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கின்றன. எப்போது மீண்டும் பள்ளிக்கூடம் திறக்கும் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், வருவாய் இழப்பை நினைத்துப் புலம்பாமல், கிடைத்திருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி தன் வீட்டுக் காலி நிலத்தில் சுயசார்பு வாழ்வுக்கான விதையை விதைத்திருக்கிறார் வினு.

லோக்கல் சவாரிக்குச் சென்றுவந்த கையோடு, கோழி, வாத்துக்களுக்குத் தீவனம் போட்டுக்கொண்டே நம்மிடம் பேசத் தொடங்கினார் வினு. “சின்ன வயசுல இருந்தே கோழி, ஆடு வளர்க்கணும்னு ஆசை. தொழில்முறையா ஆட்டோ ஓட்டுனாலும் கால்நடை வளர்ப்புதான் என் கனவு. அதுக்கான நேரத்தையும், தேவையையும் இந்தக் கரோனா காட்டிக் கொடுத்துச்சு.

ஒவ்வொருத்தரும் குழந்தைகளை நேரத்துக்குப் பள்ளிக்குக் கிளப்பி விடுறதுக்கே ரொம்பச் சிரமப்படுவாங்க. ஆனா, ஆட்டோக்காரன் பிழைப்பு ரொம்பக் கஷ்டம். எல்லாக் குழந்தைகளும் ஆட்டோவுல வரும்போது வாசலில் நின்னாத்தான் பள்ளிக்கூட வாசல் அடைக்குறதுக்கு முன்னாடி நாங்க போய்ச்சேர முடியும். பள்ளிக்கூட சவாரி எடுத்துப் போறதே அழுத்தமான வேலைதான்.

கரோனா முடக்கத்தில் பள்ளிக்கூட சவாரி இல்லாதப்பதான் நிறைய நேரம் கிடைச்சுது. உள்ளூரில் அத்தியாவசிய மருத்துவத் தேவைக்காக சிலர் சவாரி கூப்பிடுவாங்க. அதுபோக அதிக நேரம் கிடைச்சுது. அப்போதான் எனக்குள்ள இருந்த சுயசார்பு ஆர்வத்துக்கு உயிர் கொடுத்தேன். வீட்டுப் பக்கத்தில் ரொம்பக் குறைவான இடம்தான் இருந்துச்சு. அதில் கூட்டுப் பண்ணையம் அமைச்சுருக்கேன். பத்து நாட்டுக்கோழி, ஃபேன்சி கோழி, கிரிராஜா கோழின்னு லாக்டவுனின் தொடக்கத்தில் வாங்கிவிட்டேன். நாட்டுக்கோழிகள் இப்ப நல்லா வளர்ந்து முட்டைபோடும் பருவத்துக்கு வந்துடுச்சு. இதேபோல நாட்டுரக ஆடுகளும் வளர்க்குறேன். நாலு வாத்தும் வாங்கி விட்டுருக்கேன். வாத்து முட்டை உடல்சூட்டைத் தணிக்கும்ங்கறதால அதற்கான தேவையும் இருக்கு.

வாத்து நீரிலும், நிலத்திலும் வாழும். அதற்கு ஏற்ற வாழ்சூழலை உருவாக்கணும்னு இரண்டு அடி அகலத்திலும், நாலு அடி ஆழத்திலும் ஒரு குட்டிக் குளம் வெட்டியிருக்கேன். கூடவே, அந்தக் குளத்தில் 50 மீன் குஞ்சுகளைப் பிடிச்சுட்டு வந்து விட்டுருக்கேன். அதை வாத்துகள் சாப்பிடும். சில பெரிய மீன்களும் கிடக்கு. அதை வாரத்துக்கு ஒருமுறை வீட்டுல மீன்கறித் தேவைக்கு எடுத்துப்பேன்.

இதேபோல் முயல்கள், லவ் பேர்ட்ஸ்களையும் வளர்க்குறேன். வீட்டில் கிடந்த பழைய தண்ணீர்த் தொட்டியைத்தான் லவ் பேர்ட்ஸ் தொட்டியா ஆல்ட்ரேஷன் பண்ணிருக்கேன். இதுபோக வீட்டு மொட்டை மாடியில் கத்தரி, வெண்டை, தக்காளி, புதினான்னு காய்களும் போட்டுருக்கேன். எங்க வீட்டுத் தேவைக்கான காய்கள் இதன் மூலமாவே கிடைச்சுடுது. இதனால் வெளியில் இருந்து வாங்க வேண்டிய அவசியமே இல்லை.

இது எல்லாமே கரோனாவால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதும் நான் செய்ய ஆரம்பிச்சது. பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையிலேயே பலன் கிடைக்க ஆரம்பிச்சிருச்சு.

வீட்டிலேயே கோழி, ஆடு, முயல் என வளர்ப்பதால் அதன் கழிவுகளையும் வீட்டுத் தோட்டத்துக்கு உரமாக்கிடுவேன். இனி, இயல்புநிலை திரும்பி பள்ளிக்கூடம் திறந்தாலும் இந்தத் தொழிலையும் கைவிடமாட்டேன்” என்றார் வினு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x