Published : 13 Aug 2020 08:41 AM
Last Updated : 13 Aug 2020 08:41 AM
விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சமூகநல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகர் பகுதியைச் சேர்ந்த நகை தொழிலாளி அருண் (33). இவர் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டுக்கு அடிமை யாகி இருந்தார். இதனால் அதிகளவு கடன் வாங்கியுள்ளார். இதில் மீள முடியாமல் கடந்தாண்டு டிசம்பர் 13-ம் தேதி, தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை சயனைட் கொடுத்து கொன்று, தானும் தற்கொலை செய்தார்.
இது தமிழக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்றதாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 10-க்கும் மேற்பட்டோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தற்போது மீண்டும் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை தலைதூக்கியுள்ளது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். செஞ்சியில் நேற்று 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆனாலும் விழுப்புரம் மாவட்டத்தில் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை வாங்குபவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு நாள்தோறும் மாலை 3 மணிக்கு பரிசு பெற்ற எண்ணின் விவரம் அனுப்பப்படுகிறது. இதற்கான பரிசை லாட்டரி சீட்டு வாங்கியவரிடம் பெற்று கொள்ளலாம். ஏற்கெனவே லாட்டரி சீட்டு வாங்கி அறிமுகமானவர்களுக்கு மட்டுமே விற்பனை செய் யப்படுகிறது. இதனால் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் பாதிக்கப்படுவதாக சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT