Published : 12 Aug 2020 07:05 PM
Last Updated : 12 Aug 2020 07:05 PM

குறட்டைக்கான காரணத்தை கண்டறியும் கருவி: மதுரை அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டது

மதுரை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள காது, மூக்கு, தொண்டை பிரிவில் குறட்டையால் ஏற்படும் காரணத்தை கண்டறியும் கருவி நிறுவப்பட்டுள்ளது.

இந்தக் கருவி தொடக்க நிகழ்ச்சியில் டீன் சங்குமணி கலந்து கொண்டு, பாலிசோம்னோகிராஃபி (polysomnography) என்ற இந்த புதுக் கருவியை பார்வையிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இந்தக் கருவி வாங்கப்பட்டுள்ளது. காது மூக்கு தொண்டைப்பிரிவு தலைவர் பேராசிரியர் தினகரன், மருத்துவக் கண்காணிப்பாளர் பேராசிரியர் எம்.பாலசுப்பிரமணியன், பேராசிரியர் அருள் சுந்தரேஸ்வரர், இணைப்பேராசிரியர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் தினகரன் கூறுகையில், ‘‘தூக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத்திணறல் மற்றும் குறட்டை ஆகியவற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனை செய்யவும், அதற்கான காரணங்களையும் கண்டறிவதற்கும் இந்தக் கருவி பயன்படுகிறது.

உடல் பருமண் உள்ளவர்கள், மூக்கடைப்பு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்புகள், இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு இந்தக் கருவியைக் கொண்டு பரிசோதனை செய்து, அந்த தொந்தரவுகளையும் சரி செய்யலாம்.

குறிப்பாக இந்தக் கருவி, குறட்டைக்கான காரணங்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க பெரிதும் உதவுகிறது. இதுவரை அதற்கான பரிசோதனை செய்யப்படவில்லை.

இக்கருவி மதுரைக்கு வந்துள்ளது ஏழை நோயாளிகளுகக்கு வரப்பிரசாதமாகும். இந்தப் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைகளில் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் கட்டணம் பெறப்படுகிறது.

ஆனால், இனி அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவசமாக இந்த கருவியை கொண்டு இந்த நோய்களுக்கு எளிதாக சிகிச்சை அளிக்கலாம். நோயாளிகள் பரிசோதனையை இலவசமாக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் பெற்றுக் கொள்ளலாம், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x