Published : 12 Aug 2020 04:47 PM
Last Updated : 12 Aug 2020 04:47 PM
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேம்பாரில் உள்ள பெரியசாமிபுரம் கிராமம் வழியாக உயர் மின் அழுத்த மின் வழித்தடங்கள் அமைக்க கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வேம்பார் அருகே பெரியசாமிபுரம் கடற்கரை பகுதியில் தனியார் படகு கட்டும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு பெரியசாமிபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு முன்பு உள்ள மின்மாற்றியில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் எடுக்க மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
கிராமத்தின் மையப்பகுதியான சர்ச் தெரு வழியாக மும்முனை மின்சாரத்துக்காக ஒயர் கொண்டு செல்லப்படுவதற்கு பெரியசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
கிராமம் வழியாக மின் கம்பிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இங்குள்ள மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை மின்மாற்றியில் இருந்து வயர் பொருத்தும் பணிக்காக கிராமத்தில் மின்தடை செய்யப்பட்டு, மின்வாரிய ஊழியர்கள் பணிகளை மேற்கொள்ள தயாராகினர். அப்போது ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து திரண்டதால் பணிகள் நிறுத்தப்பட்டன.
தகவல் அறிந்து விளாத்திகுளம் வட்டாட்சியர் ராஜ்குமார், துணை வட்டாட்சியர்கள் சரவணப்பெருமாள், ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் செல்வராணி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயராம், காவல் துணை கண்காணிப்பாளர் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், ஆய்வாளர்கள் பத்மநாப பிள்ளை, ராமலட்சுமி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பெரியசாமிபுரத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், ஊராட்சி மன்ற தலைவர் மரிய ஆரோக்கிய சூசை, ஊர் தலைவர் ஞானபிரபொலியார், எதிர்ப்பு தரப்பை சேர்ந்த அந்தோணி ஷேந்தி ராயப்பன், பவுலின், கிங்ஸ்டன், குட்டி, பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், இரு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஒயர் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, மாவட்ட ஆட்சியரின் நேரடி ஆய்வுக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும், எதிர் தரப்பைச் சேர்ந்த கிங்ஸ்டன் என்பவர் வட்டாட்சியரிடம் மனு வழங்கினர். மனுவில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இது குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் உரிய உத்தரவு பிறப்பிக்கும் வரையும் மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு நிறைவடையும் வரையிலும் சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சார வழித்தடம் அமைக்கும் பணிகளை மேற்கொள்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெரியசாமிபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பவுலின், மீனவர் சங்க துணை தலைவர் ஞானபிரகாசம் ஆகியோர் கூறுகையில், நாங்கள் தனியார் தொழிற்சாலை அமைய வேண்டாம் என கூறவில்லை. தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படும் உயர் அழுத்த மின் கம்பிகள் கிராமத்தின் வழியாக கொண்டு செல்லத்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
கடற்கரையில் எங்கள் கிராமம் உள்ளது. எப்போதுமே காற்று அதிகமாக வீசும். அதனால், வீடுகள் இல்லாத பகுதி வழியாக தொழிற்சாலைக்கு உயர் அழுத்த மின் கம்பி இணைப்பை கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT