Published : 12 Aug 2020 03:25 PM
Last Updated : 12 Aug 2020 03:25 PM
ஆயுர்வேதம், சித்தா, யுனானி போன்ற பாரம்பரிய மருத்துவத்தை நாம் பாதுகாத்து, பரவலாக்க வேண்டும் என்பதைக் கரோனா தொற்று நமக்கு உணர்த்தியுள்ளதாக முன்னாள் அரசு செயலாளர் ஷீலாராணி சுங்கத் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1990-91 ஆம் ஆண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எனும் அமைப்பு மூலம் 'அறிவொளி இயக்கம்' எனும் அரசின் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது ஆட்சியராகவும், பின்னர் அரசின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றிய ஷீலாராணி சுங்கத் தலைமையில் மக்களுக்கு 'எழுத்தறிவு, எண்ணறிவு, செயல்முறை அறிவு மற்றும் விழிப்புணர்வு' எனும் 4 வகைத் திறன்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது. பின்னர், புதுக்கோட்டை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 30ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று இரவு (ஆக. 11) இணைய வழியில் ஷீலாராணி சுங்கத் கலந்துரையாடினார். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர்.ராஜ்குமார் ஒருங்கிணைத்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் வெ.பா.ஆத்ரேயாவின் தலைமை உரையில், 'புதிய கல்விக் கொள்கையைத் தடுக்க வேண்டும். தமிழகத்தில் அதை எதிர்ப்பதற்கான களம் வலிமையாக உள்ளது. அதை நாம் முறையாகப் பயன்படுத்த வேண்டும்' என்றார். நிறைவாக அரசு முன்னாள் செயலாளர் ஷீலாராணி சுங்கத் பேசும்போது, ’’புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொண்ட பணியின் மூலம் நான் மகிழ்ச்சி அடைந்ததைப் போன்று வேறு எந்த அரசுப் பணியிலும் அடைந்ததில்லை.
அறிவொளி பணிக்காக கிராமங்களுக்குச் செல்லும்போது ஆண்கள் எனது காரைப் பின் தொடர்ந்து வருவார்கள். ஆனால், பெண்கள் ஆங்காங்கே நின்று ஏக்கத்தோடு வேடிக்கை பார்ப்பார்கள். பின்னர், சுமார் லட்சம் பெண்களுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கப்பட்டது. சைக்கிள் வாங்க வங்கிக் கடனும் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், குறுகிய காலத்தில் மக்கள் இயக்கமாக நடத்தி 2 லட்சத்துக்கு 90,000 பேருக்கு கற்பிக்கப்பட்டதன் மூலம் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக புதுக்கோட்டை அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற இயக்கங்கள் தற்போதும் தேவைப்படுகின்றன.
உலகெங்கும் பரவி வரும் கரோனா தொற்றுக்கு அலோபதி மருத்துவத்தைவிட ஆயுர்வேதம், சித்தா, யுனானி போன்ற நம் பாரம்பரிய மருத்துவமே பெரும் பயனளித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே, நம் பாரம்பரிய மருத்துவத்தைப் பாதுகாத்து, பரவலாக்க வேண்டும் என்பதை உணர்ந்து மீண்டும் நாம் மாபெரும் இயக்கமாகப் பணியாற்ற வேண்டும்’’ என்றார்.
இடையிடையே ஏராளமானோர் விழிப்புணர்வுப் பாடல்கள் பாடப்பட்டன. முன்னதாக, அறிவொளி திட்டத்தில் பணியாற்றி இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT