Last Updated : 12 Aug, 2020 11:27 AM

 

Published : 12 Aug 2020 11:27 AM
Last Updated : 12 Aug 2020 11:27 AM

ஊரடங்கு, இ-பாஸ் கட்டுப்பாடுகளுக்கு இடையே ஆர்டர்களை பெறுவதில் பின்னலாடை துறைக்கு சிக்கல்: தொழில் வளர்ச்சிக்கு மாற்று நடவடிக்கைகள் தேவை

திருப்பூர்

ஆடை தயாரிப்பு சந்தையில் சர்வதேச கவனம் பெற்ற திருப்பூர் பின்னலாடை துறையில், ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

நேரடியாகவும், மறைமுகமாகவும் 9 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளித்து வந்த இத்துறை, கரோனா வைரஸ் பாதிப்பில் தப்பவில்லை. ஏற்கெனவே மூலப்பொருள் விலை உயர்வு, அண்டை நாடுகளுக்கு இணையானவிலை கொடுக்க இயலாமை போன்றவற்றால் சிக்கி தவித்து வந்த திருப்பூர் பின்னலாடை துறைக்கு, கரோனா வைரஸ் பரவலால் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டது பெரும் சிக்கலாக அமைந்தது. ஒன்றரை மாதத்துக்கு பிறகு திறக்கப்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், தொழிலாளர்கள் இல்லாமல் ஆர்டர்களை முடிக்க திணறின. வெளி மாநில மற்றும் வெளியூர் தொழிலாளர்கள் பெரும்பான்மையானோர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்ட நிலையில், உள்ளூர் தொழிலாளர்களை வைத்து ஆர்டர்கள் முடிக்கப்பட்டுள்ளன.

பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட புதிய ஆர்டர்களை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்கள் வரவுள்ள நிலையில், புதிய ஆர்டர்களை பெறுவதற்கு இ-பாஸ் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகப்பெரும் தடையாக உள்ளதாக தெரிவிக்கின்றனர் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள்.

போக்குவரத்து முக்கியம்

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:

தொழில்நுட்பம் எவ்வளவுதான் வளர்ந்திருந்தாலும் நேருக்கு நேர் பேசி ஆர்டர்களை பெறுவதுபோன்று வராது. உள்நாட்டு உற்பத்தியாக இருந்தாலும், ஏற்றுமதி ரகமாக இருந்தாலும் ஆர்டர் அளிப்போர் இங்கு வந்து செல்லவும், உற்பத்தியாளர்கள் வெளியூர் சென்று வரவும் போக்குவரத்து முக்கியமானது. தற்போதுள்ள இ-பாஸ்பிரச்சினையால் புதிய ஆர்டர்களை பெறுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பளிக்க புதியஆர்டர்களை பெறுவது அவசியம்.

கையிருப்பும் இல்லை

திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம் மாவட்டங்கள் ஜவுளி உற்பத்தி சார்ந்தவை. இங்கு தொழில் சார்ந்து இருப்போர் அங்கு செல்வார்கள், அங்கு இருப்போர் இங்கு வருவார்கள். இவையனைத்தும் தடைபட்டுள்ளன. உள்நாட்டு சந்தையை பொறுத்தவரை, டெல்லி,கொல்கத்தா, மும்பை உட்பட அனைத்து சந்தைகளிலும் பின்னலாடை கையிருப்புகள் போதிய அளவில் இல்லை. உற்பத்தி மையமான திருப்பூரிலும் இல்லை. தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்கள் வரும் நேரம் இது. அதோடு, சீனா செல்ல வேண்டிய வெளிநாட்டு ஆர்டர்களுக்கான வர்த்தக விசாரணைகளும் தொடங்கியுள்ளன. இதை தொழில்துறை வளர்ச்சிக்குபயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தொழில்துறை சரிவடையும்

தொழில் துறை வளர்ச்சிக்கு இ-பாஸ், ஊரடங்கு முறைகளைகைவிட்டு, மாற்று நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். கரோனா பாதிப்பின் ஆரம்ப காலத்தில் ஊரடங்கு தேவையாக இருந்தது. ஆனால், கரோனோ காலம் முழுவதும் தொடர்வது தொழில் துறையின் சரிவுக்கு வழிவகுக்கும். எனவே, கரோனா பரவலை கட்டுப்படுத்தும் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளுடன், தொழில் வளர்ச்சிக்கான மாற்று நடவடிக்கைகளை உனடியாக செயல்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x