Published : 12 Aug 2020 07:47 AM
Last Updated : 12 Aug 2020 07:47 AM
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துகளால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அடிப்படை பணிகளை தொடங்கியுள்ளன. இரு கட்சிகளும் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய தலைவர்கள் இல்லாத நிலையில் முதல்முறையாக சட்டப்பேரவை பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளன.
திமுகவை பொறுத்தவரை தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளராக ஒருமனதாக முன்னிறுத்தப்படுவார். ஆனால், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது கேள்விக்குரியதாகவே இருந்து வருகிறது.
தமிழக முதல்வராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம்ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். இதையடுத்து, அன்றே முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அதன்பின், சசிகலா முதல்வராக முயற்சித்ததால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, ஓபிஎஸ் தலைமையில் தனி அணி உருவானது. அந்தச் சூழலில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதால், முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார்.
ஒற்றை தலைமை
அதன்பின், டிடிவி தினகரன் ஓரங்கப்பட்டு, ஓபிஎஸ் - பழனிசாமி அணிகள் இணைந்தன. ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி இருந்து கட்சியை நிர்வகித்து வருகின்றனர். ஆனாலும், ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்ற கருத்தும் அவ்வப்போது கட்சிக்குள் எழுந்து வருகிறது.
கட்சி நடவடிக்கைகள், நிர்வாகிகள் நியமனம் ஆகியவற்றில் முதல்வர் பழனிசாமி கையே ஓங்கி இருப்பதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் நடந்துவரும் நிலையில், பல்வேறு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதேபோல், தகவல் தொழில்நுட்ப பிரிவும் கலைக்கப்பட்டு, 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். காலியாக உள்ள பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதிலும், எவ்வித சிக்கலுமின்றி இரு தரப்பு ஆதரவாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இரட்டை தலைமையை கொண்டுள்ள அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று முன்தினம் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் கே.ராஜு, ‘‘தேர்தல் வரப்போகிறது. இயக்கம்புதிய வேகத்துடன் தயாராகி வருகிறது. அதிமுக கொள்கைப்படி சட்டப்பேரவை தேர்தல் முடிவில், உறுப்பினர்கள் கூடி யாரை தலைவர் என்று அறிவிக்கிறார்களோ அவர்தான் முதல்வர். இதில் மாற்றுக்கருத்து இல்லை’’ என்றார்.
முதலில் இலக்கு
இதற்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பழனிசாமியே என்றும் முதல்வர். இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம். பழனிசாமியை முன்னிறுத்தி தளம் அமைப்போம். களம் காண்போம்.வெற்றி கொள்வோம்’ என்று தெரிவித்திருந்தார்.
வெளிப்படையாக..
இதுதொடர்பாக ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், ‘‘ஒரு முடிவை எடுத்து இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றி எளிதாக கிடைக்கும். களத்தை சந்தித்துவிட்டு முடிவை பின்னால் எடுப்போம் என்றால் அது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதல்வரும், துணை முதல்வரும் வெளிப்படையாக பேசி, நல்ல முடிவுகளை அறிவிக்க வேண்டும். முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதை மக்கள் பார்க்கின்றனர். ஏழை மக்கள் ஏற்றுக்கொள்ளும் தலைவராக, மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பதை பார்க்கின்றனர். எனவே, யார் வரவேண்டும், யார் இருக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவெடுத்துவிட்டனர். மக்கள் விருப்பத்தை, என் மனதுக்கு பட்டதை நான் சொல்கிறேன்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT