Published : 11 Aug 2020 06:22 PM
Last Updated : 11 Aug 2020 06:22 PM

பெண்களுக்கு சொத்தில் சம பங்கு; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் வரவேற்பு

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

பெண்களுக்கு சொத்தில் சம பங்கு என்பதை உறுதிபடுத்தியுள்ள உ ச்ச நீதிமன்ற தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஆக.11) வெளியிட்ட அறிக்கை:

"இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு நிகராக பெண் வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு என்கிற திருத்தம் 200 5இல் இந்து வாரிசு சட்டத்தில் கொண்டு வரப்பட்டது. 2005-க்கு முன்னாலேயே தந்தை இறந்து போன குடும்பங்களுக்கும் இது பொருந்துமா என்கிற கேள்வியோடு போடப்பட்ட வழக்குகளில் கடந்த காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஒன்றுக்கொன்று சற்று முரண்பட்டு இருந்தன.

தற்போதைய தீர்ப்பில், திருத்தம் 2005-ல் வந்திருந்தாலும் அதற்கு முன்னரே தந்தை இறந்து போன குடும்பங்களிலும் பூர்வீக சொத்தில் பெண் வாரிசுகளும் சமமான பங்குதாரரே என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

பெண்களுக்கு அவர்களுடைய பூர்வீக சொத்தில் சம பங்கு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட நெடுங்காலமாக கோரி வந்துள்ள சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சமபங்கினை சட்டமாக்கிய மாநிலங்களில் தமிழகத்திற்கு முதன்மை பாத்திரம் உண்டு. 1989-ல் திமுக ஆட்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இச்சூழலில் பூர்வீக சொத்துடைமையில் பெண் வாரிசுகளுக்கான சம பங்கை பின் தேதியிட்டு உறுதிப்படுத்தி இருக்கக்கூடிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார வரவேற்கிறது, பாராட்டுகிறது"

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x