Published : 11 Aug 2020 05:56 PM
Last Updated : 11 Aug 2020 05:56 PM
பொதுத்துறை நிறுவனமான கிராம வங்கிகளில் விவசாயத்திற்காக பெறும் நகைக்கடனுக்கு 8.25% வட்டி வசூலிக்கப்படுகிறது. அனைத்து பொதுத்துறை வங்கிகளும் 7 சதவீதம் வட்டி நிர்ணயித்துள்ள நிலையில் கிராம வங்கி மட்டும் 8.25 சதவீதம் என்று நிர்ணயித்திருப்பது மாற்றி 7% குறைக்கவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“கிராமப்புற மக்களுக்கு எளிதில் வங்கிச் சேவை கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் துவங்கப்பட்டது கிராம வங்கிகள். பாண்டியன், பல்லவன் என்று பல்வேறு பெயர்களில் துவங்கப்பட்ட கிராம வங்கிகள் தற்போது மாநில அளவில் தமிழ்நாடு கிராம வங்கிகள் என்று மாற்றப்பட்டு 632 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
பொதுத்துறை நிறுவனமான இந்த கிராம வங்கிகளில் விவசாயத்திற்காக பெறும் நகைக்கடனுக்கு 8.25% வட்டி வசூலிக்கப்படுகிறது. அனைத்து பொதுத்துறை வங்கிகளும் 7 சதவீதம் வட்டி நிர்ணயித்துள்ள நிலையில் கிராம வங்கி மட்டும் 8.25 சதவீதம் என்று நிர்ணயித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
தனியார் வங்கி மற்றும் அடகு கடைகளில் வட்டி அதிகம் என்ற காரணத்தினால் தான் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் நகையை அடகு வைக்கிறார்கள். ஏற்கனவே கடன் சுமை காரணமாக நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் வங்கி நிர்வாகம் உடனடியாக இந்த அநியாய வட்டியை ரத்து செய்து மற்ற பொதுத்துறை வங்கிகள் போல் நகைக்கடனுக்கு 7 சதவீதம் என்று வட்டியை நிர்ணயிக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது.
அத்துடன், விவசாயக் கடனுக்கு செயல்முறைக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வேறு எந்த வங்கிகளிலும் இல்லை. வங்கி தன்னுடைய பணியை செய்வதற்கு விவசாயிகளிடம் 1 லட்சம் ரூபாய்க்கு 250 ரூபாய் கட்டணம் வசூலிப்பது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும். எனவே, இந்த செயல்முறைக்கட்டணம் வசூலிப்பதையும் உடனடியாக நிறுத்திட வங்கி நிர்வாகம் முன்வர வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு, விவசாயிகளுக்கு விரோதமான வட்டி மற்றும் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT